Published : 27 May 2023 08:23 AM
Last Updated : 27 May 2023 08:23 AM
புதுடெல்லி: 2024 நாடாளுமன்ற தேர்தலில் நரேந்திர மோடியே மீண்டும் பிரதமராக வரவேண்டும் என்று 49 சதவீத மக்கள் விருப்பம் தெரிவித்திருப்பதாக ஏபிபி நிறுவனம் மற்றும் சி வோட்டர் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
மத்தியில் பாஜக ஆட்சி அமைந்து நேற்றுடன் 9 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. இதனை நாடு முழுவதும் பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர். மூன்றாவது முறையாக மீண்டும் மோடிதான் பிரதமர் என்பதை கடந்த 25ஆம் தேதி அசாமில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி செய்துள்ளார். இன்னொரு புறம், தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே இருக்கும் நிலையில், பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணியும் மும்முரமாக நடந்து வருகிறது.
இந்தநிலையில், அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் யார் பிரதமராக வரவேண்டும் என்று ஏபிபி செய்தி நிறுவனம் மற்றும் சி வோட்டர் இணைந்து நாடு முழுவதும் நடத்திய கருத்துக் கணிப்பில் 49 சதவீதம் பேர் மோடியே மீண்டும் பிரதமராக வரவேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளது தெரியவந்துள்ளது. 18 சதவீதம் பேர் ராகுல் காந்திக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு 6 சதவீதம் பேரும், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 5 சதவீதம் பேரும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு 2 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மேலும் மற்றொரு கருத்துக் கணிப்பில், பிரதமர் மோடியின் 9 ஆண்டுகால ஆட்சி மிகவும் திருப்திகரமாக இருப்பதாக 73.02 சதவீத மக்கள் தெரிவித்துள்ளனர். இது 2021ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் 62.05 சதவீதமாகவும், 2022ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் 82.96 சதவீதமாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஐந்தில் மூன்று இந்தியர்கள் பிரதமர் மோடி வலிமையான முடிவுகளை எடுப்பதாக கருதுவதாக சி வோட்டர் கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT