Published : 26 May 2023 04:37 PM
Last Updated : 26 May 2023 04:37 PM
ராஜ்பிப்லா(குஜராத்): புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிப்பது என்ற எதிர்க்கட்சிகளின் முடிவு துரதிருஷ்டவசமானது என்று தெரிவித்துள்ள மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், “அரசியல் செய்வதற்கும் ஓர் எல்லை உள்ளது” என்று காட்டமாக கூறியுள்ளார்.
குஜராத்தில் இருந்து மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட எஸ்.ஜெய்சங்கர், இரண்டு நாள் பயணமாக அம்மாநிலத்திற்குச் சென்றுள்ளார். நர்மதா மாவட்டத்தில் உள்ள ராஜ்பிப்லா நகரில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: "புதிய நாடாளுமன்ற கட்டிடத் திறப்பு விழா, ஜனநாயகத் திருவிழாவாகக் கொண்டாடப்பட வேண்டும். இதில் சர்ச்சையை உருவாக்கக் கூடாது. ஆனால், இது சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டிருப்பது துரதிருஷ்டவசமானது.
சிலர் இதை சர்ச்சைக்குரியதாக ஆக்க முயல்கிறார்கள். ஆனால், அரசியல் செய்வதற்கும் ஓர் எல்லை இருக்கிறது. இதுபோன்ற நிகழ்வுகளில் ஒட்டுமொத்த நாடும் இணைந்து இதனை திருவிழாவாகக் கொண்டாட வேண்டும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
தனது இந்த பயணத்தின்போது குஜராத்தின் நர்மதா மாவட்டத்தில் 4 கிராமங்களுக்குச் செல்லவுள்ள எஸ்.ஜெய்சங்கர், அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள மக்கள் நலத் திட்டங்களை பார்வையிட உள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் ஆதர்ச கிராம திட்டத்தின் கீழ் இந்த 4 கிராமங்களை ஜெய்சங்கர் தத்தெடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT