Published : 01 Oct 2017 03:01 PM
Last Updated : 01 Oct 2017 03:01 PM

சக்கர ஸ்நான நிகழ்ச்சியுடன் திருப்பதி பிரம்மோற்சவம் நிறைவு: ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்

 

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழாவில் இன்று காலை சக்கர ஸ்நான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினர். இதனை தொடர்ந்து இன்றுடன் பிரம்மோற்சவம் நிறைவடைந்தது.

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் 23ம் தேதி கொடியேற்றத்துடன் கோலகலமாக தொடங்கியது. இதனை தொடர்ந்து தினமும் காலை, இரவு ஆகிய இரு வேளைகளிலும் உற்சவ மூர்த்திகள் 4 மாட வீதிகளிலும் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதில் கருட சேவை, தேர் திருவிழா, சக்கர ஸ்நானம் உள்ளிட்டவைகளை காண ஆயிக்கணக்கான பக்தர்கள் திருமலையில் திரண்டனர். 9 நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற திருப்பதி பிரம்மோற்சவ விழாவில் எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறாத வாறு போலீஸாரும், தேவஸ்தானத்தினரும் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். மேலும், திருமலைக்கு வந்த அனைவருக்கும் இலவச உணவு, குடிநீர், போக்குவரத்து, தங்குமிடம் போன்ற வசதிகளையும் செய்திருந்தனர்.

நிறைவு நாளான இன்று காலை கோயில் குளத்தில் 1 கோடி லிட்டர் தண்ணீரில் சக்கர ஸ்நான நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக, காலை உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி சமேதமாய் மலையப்ப சுவாமி மற்றும் சக்கரத்தாழ்வாரை ஊர்வலமாக கோயிலில் இருந்து குளம் வரை கொண்டு வந்தனர். பின்னர் வராக சுவாமி கோயில் அருகே உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு திருமஞ்சன நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து சக்கரத்தாழ்வாரின் சக்கர ஸ்நான புனித நீராடல் நிகழ்ச்சி நடந்தது. இதில் தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி அணில் குமார் சிங்கால், இணை நிர்வாக அதிகாரி ஸ்ரீநிவாச ராஜு, தலைமை பாதுகாப்பு அதிகாரி ரவிகிருஷ்ணா, இறகு பந்து வீராங்கனை பி.வி. சிந்து மற்றும் அர்ச்சகர்கள், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

சக்கர ஸ்நான நிகழ்ச்சியை தொடர்ந்து இன்று மாலை கோயில் வளாகத்தில், தங்க கொடி மரத்தில் பிரம்மோற்சவ கொடி இறக்க நிகழ்ச்சி ஆகம சாஸ்திரங்களின்படி நடைபெறுகிறது.. இந்நிகழ்ச்சியுடன் பிரம்மோற்சவம் நிறைவடைகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x