Published : 26 May 2023 05:31 AM
Last Updated : 26 May 2023 05:31 AM
பெங்களூரு: கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம், துறை பங்கீடு ஆகியவை குறித்து மாநில முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார் ஆகியோர் நேற்று காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுடன் டெல்லியில் ஆலோசனை நடத்தினர்.
கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதை தொடர்ந்து கடந்த 20-ம் தேதி சித்தராமையா முதல்வராகவும், டி.கே.சிவகுமார் துணை முதல்வராகவும் பதவி ஏற்றனர். அமைச்சரவையில் இடம் பிடிக்க கடும் போட்டி ஏற்பட்டதால் முதல் கட்டமாக 8 அமைச்சர்கள் மட்டும் அன்றைய தினம் பதவி ஏற்றனர். ஆனால் அவர்களுக்கு இன்னும் துறைகள் ஒதுக்கப்படவில்லை.
இந்நிலையில் முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை, “காங்கிரஸூக்கு தனிப் பெரும்பான்மை கிடைத்தும் ஏன் இன்னும் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படவில்லை. துறை ஒதுக்கீடு செய்யப்படாதது ஏன்? அமைச்சர்கள் நியமிக்கப்படாததால் துறை ரீதியான ஆட்சி நிர்வாக பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது'' என்று விமர்சித்துள்ளார்.
இதனிடையே மூத்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆர்.வி.தேஷ் பாண்டே, ஹெச்.கே.பாட்டீல், ஹெச்.சி.மஹாதேவப்பா, தினேஷ் குண்டுராவ் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்டோர் அமைச்சர் பதவியை கைப்பற்ற கடும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இதே போல பட்டியல், பழங்குடியின எம்எல்ஏக்களும், முஸ்லிம் எம்எல்ஏக்களும் தங்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் அமைச்சரவையில் வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார் இருவரும் தனித்தனியாக டெல்லி சென்றுள்ளனர். காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மேலிடப் பொறுப்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா, பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் ஆகியோரை நேற்று சந்தித்து பேசினர்.
அப்போது இருவரும் தாங்கள் தயாரித்து கொண்டு வந்திருந்த 28 அமைச்சர்கள் கொண்ட பட்டியலை முன்வைத்து பேச்சுவார்த்தையை தொடங்கினர். சித்தராமையா, டி.கே.சிவகுமார் ஆகிய இருவரும் அமைச்சரவையில் தங்களது ஆதரவாளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தினர். இருவரும் தங்களின் தரப்புக்கு தலா 10 பேருக்கு அமைச்சரவையில் இடமளிக்க வேண்டும் என கோரியதாக கூறப்படுகிறது.
ராகுல் காந்தி: வட கர்நாடகா, கல்யாண கர்நாடகா பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு அமைச்சரவையில் கூடுதல் இடங்கள் ஒதுக்க வேண்டும். காங்கிரஸின் வெற்றிக்கு காரணமான பட்டியல், பழங்குடியினர், முஸ்லிம் வகுப்பினருக்கு கூடுதலான இடங்களையும், முக்கியத்துவம் வாய்ந்த துறைகளையும் அளிக்க வேண்டும் என கட்சித் தலைவர் கார்கே வலியுறுத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் 20 முதல் 28 பேர் வரை இறுதி செய்யப்பட்ட அமைச்சர்களின் பட்டியல் குறித்துகாங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியுடன் கார்கே ஆலோசனை நடத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ராகுல் காந்தி அமெரிக்காவுக்கு செல்வதற்கு முன்பாக அமைச்சரவை பங்கீடு, துறை ஒதுக்கீடு குறித்து முடிவெடுப்பார் எனவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து துணை முதல்வர் டி.கே.சிவகுமார் கூறுகையில், “அமைச்சரவை விரிவாக்கம் குறித்த பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்து வருகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் அமைச்சரவை பட்டியல் வெளியிடப்படும்” என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT