Published : 25 May 2023 03:43 PM
Last Updated : 25 May 2023 03:43 PM
உஜ்ஜைனி: “அறிவியல் கோட்பாடுகளின் உண்மையான பிறப்பிடமே வேதங்கள்தான். ஆனால், மேற்குலக படைப்புகள் போல் அவை வேறு போர்வையில் கொடுக்கப்பட்டுள்ளன” என்று இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் கூறியுள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜஜைனியில் உள்ள மகரிஷி பானினி சம்ஸ்கிருத மற்றும் வேதிக் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் அவர் இவ்வாறு பேசியுள்ளார். அவர் மேலும் பேசுகையில், “அறிவியல் கோட்பாடுகளின் உண்மையான பிறப்பிடம் வேதங்களே. ஆனால், மேற்குலக படைப்புகள் போல் அவை வேறு போர்வையில் கொடுக்கப்பட்டுள்ளன. கணிதத்தின் அல்ஜீப்ரா, ஸ்கொயர் ரூட்ஸ், நேரம் தொடர்பான கணக்குகள், கட்டுமானக் கலை, பிரபஞ்சத்தின் கட்டமைப்பு, விமான அறிவியல், உலோக அறிவியல் எனப் பலவற்றிலும் வேதங்களே முன்னோடி.
ஆரம்ப காலத்தில் சம்ஸ்கிருத மொழிக்கு எழுத்துரு இல்லாமல் பேச்சு வழக்கு மட்டுமே இருந்ததால், அதில் சொல்லப்பட்ட அறிவியல் அபகரிக்கப்பட்டு, மேற்குலகின் தத்துவங்கள் போல் கொடுக்கப்பட்டுள்ளன. பின்னாளில் தேவநாகரி எழுத்துரு வந்தபின்னர் சம்ஸ்கிருத அறிவு செழித்தோங்கியது.
சம்ஸ்கிருதத்தில் எழுதப்பட்ட இந்திய இலக்கியங்கள் வளமானவை. வானியல், மருத்துவம், அறிவியல், இயற்பியல், வேதியியல் மற்றும் வானூர்தி அறிவியல் ஆகியவற்றில் கண்டுபிடிப்புகள் சம்ஸ்கிருதத்தில் எழுதப்பட்டன. இதற்கு சூர்ய சித்தாந்தமே உதாரணம். என் கல்விப் பருவத்தில்தான் சூரிய குடும்பம், கால அளவு மற்றும் பூமியின் அளவு மற்றும் சுற்றளவு பற்றி பேசும் சம்ஸ்கிருத புத்தகத்தால் ஈர்க்கப்பட்டே அது தொடர்பாக படித்தேன்” என்று அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT