Published : 25 May 2023 02:42 PM
Last Updated : 25 May 2023 02:42 PM

தண்ணீர் பஞ்சத்தால் கிணற்றுக்குள் கயிறு பிடித்து இறங்கும் மகாராஷ்டிர கிராம மக்கள் - ‘திக் திக்’ வீடியோ

நாசிக்: மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தில் அமைந்துள்ள கோஷிம்பாடா கிராமத்தில் வசித்து வரும் மக்கள் தண்ணீர் பஞ்சத்தால் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். அந்த கிராமத்தின் சுற்று வட்டார பகுதிகளிலும் இதே நிலைதான். வறண்ட கிணற்றில் கிடைக்கும் தண்ணீரை எடுக்க கிணற்றுக்குள் இறங்கி ஒவ்வொரு குடமாக சேகரிக்க வேண்டிய சூழல் உள்ளது.

குடிநீர் தட்டுப்பாட்டால் வாழ்வதே போராட்டமாகி உள்ள நிலையில், வறண்டு போன அந்த கிணற்றில் கிடைக்கும் நீரை எடுக்க மணிக்கணக்கில் தினந்தோறும் நேரத்தை செலவிட்டு வருகின்றனர் கிராம மக்கள். அந்த கிணற்றில் கிடைக்கும் நீரும் சுத்தமானதாக இல்லை என்றே தெரிகிறது. தண்ணீர் குழாயை திறந்து தண்ணீர் பிடிக்கும் மக்களுக்கு எங்களது வலியை உணர முடியாது என சொல்வதுபோல உள்ளது அவர்கள் எதிர்கொண்டு வரும் சிரமம்.

இது தொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளது. அதில் கிணற்றின் பக்கவாட்டு சுவரினை பற்றிய கயிறு பிடித்து இறங்கும் பெண் ஒருவர், கீழே இறங்கியதும் மேலிருந்து அனுப்பப்படும் வாளிகளில் குவளை கொண்டு நீரை சேகரிக்கிறார். பின்னர் கவனத்துடன் மேலே வந்து மாசு நிறைந்த அந்த நீரை வடிகட்டி, பானையில் சேகரிக்கிறார்.

மழை இல்லாதது, வறட்சி, காலநிலை மாற்றம் போன்றவை அந்தப் பகுதியில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலத்தடி நீரை அதிக அளவில் பயன்படுத்தி வருவதும் இதற்கு காரணம் எனத் தெரிகிறது.

இந்த கிராமத்தில் நிலவும் கடுமையான தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என மகாராஷ்டிர மாநில பழங்குடியினர் மேம்பாட்டுத் துறை அமைச்சர் விஜய்குமார் கிருஷ்ணாராவ் கவிட் தெரிவித்துள்ளார். மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு கிராமத்திற்கும் தண்ணீர் இணைப்பை உறுதி செய்ய டெண்டர் விடப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் இது நிறைவேற்றப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் தண்ணீர் பற்றாக்குறை மிகுந்த பகுதியாக நாசிக், ராய்காட் மற்றும் அவுரங்காபாத் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x