Published : 25 May 2023 09:54 AM
Last Updated : 25 May 2023 09:54 AM
புதுடெல்லி: மூன்று நாடுகள் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று (வியாழக்கிழமை) காலை தாயகம் திரும்பிய பிரதமர் நரேந்திர மோடி டெல்லி விமான நிலையத்தில் பேசுகையில், தமிழ் மொழிதான் இந்த உலகின் தொன்மையான மொழி. அது ஒவ்வொரு இந்தியரின் மொழி எனத் தெரிவித்தார்.
ஜப்பான், பப்புவா நியூ கினி மற்றும் ஆஸ்திரேலிய நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி பயணம் மேற்கொண்டிருந்தார். இந்தப் பயணங்களை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய பிரதமர் மோடி டெல்லி பாலம் சர்வதேச விமான நிலையத்தில் கட்சித் தொண்டர்களை சந்தித்தார்.
அப்போது அவர், "நான் வெளிநாடுகளில் நம் தேசத்தின் கலாச்சாரம் பற்றிப் பேசும்போது இந்த உலகின் கண்களை உற்று நோக்குகிறேன். இந்த நம்பிக்கை எனக்கு வரக்காரணம் இங்கே அமைந்துள்ள பெரும்பான்மை பலமிக்க ஆட்சி. இந்த உலகம் இப்போதெல்லாம் இந்தியா என்ன சிந்திக்கிறது என்பதை அறிய ஆர்வமுடன் இருக்கிறது.
கரோனா தடுப்பூசியை உலக நாடுகளுக்கு அளித்தது பற்றி வெளிநாட்டில் எனக்கு கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது நான் அவர்களிடம், இது புத்தரின் மண். நாங்கள் எதிரிகளையும் அக்கறையுடன் நடத்துவோம் என்றேன்.
தமிழ் மொழி நம் மொழி. அது ஒவ்வொரு இந்தியரின் மொழி. உலகின் தொன்மையான மொழி தமிழ் மொழி. அந்த மொழி தந்த திருக்குறளை பப்புவா நியூ கினி நாட்டில் டோக் பிசின் மொழியில் மொழிபெயர்த்துள்ளனர். அதை வெளியிடும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. அது எனக்கு மகிழ்ச்சி அளித்தது" என்றார்.
மேலும், இந்தியாவில் நடைபெறவுள்ள உலக கோப்பை கிரிக்கெட் போட்டியைக் காண ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பனீஸுக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
முன்னதாக தென்மேற்கு பசிபிக் கடலில் உள்ள பப்புவா நியூ கினி நாடு நாட்டின் தலைநகர் போர்ட் மோரெஸ்பியில் இந்திய - பசிபிக் தீவுகள் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு நடந்தது. இதில் பிரதமர் மோடி பங்கேற்றார். இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக, பப்புவா நியூ கினியின் தேசிய மொழியான தோக் பிசின் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறளை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT