Published : 24 May 2023 01:13 PM
Last Updated : 24 May 2023 01:13 PM

புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட 19 கட்சிகள் கூட்டாக அறிவிப்பு

புதுடெல்லி: வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள புதிய நாடாளுமன்றக் கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்கப் போவதாக காங்கிரஸ் உள்ளிட்ட 19 கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளன.

இது தொடர்பாக காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ் கட்சி, ஆம் ஆத்மி கட்சி, சிவ சேனா (உத்தவ் தாக்கரே பிரிவு), சமாஜ்வாதி கட்சி, ராஷ்ட்ரீய ஜனதா தளம், சிபிஎம், சிபிஐ, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ராஷ்ட்ரிய லோக் தளம், கேரள காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தேசிய மாநாட்டுக் கட்சி, புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி, மதிமுக, விசிக ஆகிய 19 கட்சிகள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளன. அதில், "குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை முற்றிலுமாக ஒதுக்கி வைத்துவிட்டு, புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை தானே திறந்து வைக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் முடிவானது, குடியரசுத் தலைவருக்கு அவமானம் மட்டுமல்ல, நமது ஜனநாயகத்தின் மீதான நேரடித் தாக்குதலாகும்.

சர்வாதிகாரப் போக்கு: நாடாளுமன்றத்தில் இருந்து ஜனநாயகத்தின் ஆன்மா உறிஞ்சப்பட்டுவிட்ட நிலையில், அந்தப் புதிய கட்டிடத்திற்கு மதிப்பு இல்லை. எனவே, புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்கும் எங்களின் கூட்டு முடிவை அறிவிக்கிறோம். சர்வாதிகாரப் போக்குடன் நடந்து கொள்ளும் பிரதமர் மோடி மற்றும் அவரது அரசாங்கத்திற்கு எதிராக, அனைத்து விதித்திலும் தொடர்ந்து போராடுவோம். எங்கள் செய்தியை நாட்டு மக்களுக்கு நேரடியாக எடுத்துச் செல்வோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டறிக்கையில் கையெழுத்திட பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சி மறுத்துவிட்டது. எனினும், நாடாளுமன்ற புதிய கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்கப் போவதாக அக்கட்சி தனியாக அறிவித்துள்ளது.

பிரதமர் பதிலளிக்க வேண்டும்: இதனிடையே, காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கர்நாடகாவில் உள்ள குல்பர்காவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “பாஜகவினர் பட்டியலின, பழங்குடியின வகுப்பினரை பெயரளவுக்கு மட்டுமே மதிக்கிறது. அவர்களின் வாக்குகளை பெறுவதற்காக ஓரிருவருக்கு பொறுப்புகளை வழங்கப் படுகிறது. ஆனால் மதிக்க வேண்டிய இடத்தில் அவர்களை அவமதிப்பதை பாஜக வழக்கமாக கொண்டுள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் திறப்பு விழாவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அழைக்கப்படவில்லை.

அவரை அழைக்காதது ஏன் என பிரதமர் நரேந்திர மோடி பதிலளிக்க வேண்டும். கட்டப்பட்டுள்ள இந்த நாடாளுமன்றத்தின் அடிக்கல் நாட்டு விழாவுக்கு அப்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தையும் பாஜக அழைக்கவில்லை. இதன்மூலம் பட்டியலின, பழங்குடியின வகுப்பினரை பாஜக புறக்கணித்துள்ளது.

சமூக நீதி கடைப்பிடிக்கப்படும்: கர்நாடக அமைச்சரவையில் சமூக நீதியின் அடிப்படையில் அனைத்து வகுப்பினருக்கும் பிரதிநிதித்துவம் வழங்கப்படும். சிறு சாதிகளுக்கும் அமைச்சரவையில் இடமளிக்கப்படும். மிகவும் பின்தங்கியுள்ள கல்யாண கர்நாடக பகுதியை சேர்ந்த 3 அல்லது 4 பேருக்கு அமைச்சரவையில் இடமளிக்கப்படும்" என்று அவர் கூறினார்.

புதிய நாடாளுமன்றக் கட்டிடம்: டெல்லியில் தற்போது இருக்கும் நாடாளுமன்ற கட்டிடம் சுமார் 96 ஆண்டுகள் பழமையானது. இந்த கட்டிடத்தை இடிக்காமல் பழைய கட்டிடத்தை ஒட்டி 65,000 சதுர மீட்டர் பரப்பளவில் சென்ட்ரல் விஸ்டா என்ற பெயரில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டும் பணிகள் கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கின. 2021, 2022-ம் ஆண்டு கரோனா காலத்திலும் இதற்கான பணிகள் மட்டும் தொடர்ந்து நடைபெற்று வந்தன. ரூ. 20,000 கோடி மதிப்பிலான சென்ட்ரல் விஸ்டா கட்டிடப் பணிகள் கடந்த நவம்பர் மாதம் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் தாமதமாகிவிட்டது.

தற்போது பணிகள் முடிந்த நிலையில், வரும் 28-ம் தேதி பிரதமர் மோடி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்க உள்ளார். இதற்கான அழைப்பிதழை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா சமீபத்தில் பிரதமர் மோடியை சந்தித்து, முறைப்படி வழங்கினார். புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் அமைந்துள்ள மக்களவை அரங்கில் 888 உறுப்பினர்கள் வசதியாக அமரும் வகையில் இடவசதி செய்யப்பட்டு உள்ளது. இதைப்போல மாநிலங்களவையில் 300 எம்.பி.க்கள் அமர வசதி உள்ளது. அதேநேரம் இரு அவைகளின் கூட்டுக்கூட்டம் நடத்தப்பட்டால் 1,280 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமரும் வகையிலும் மக்களவை அரங்கில் வசதி செய்யப்பட்டு உள்ளது .இந்தத் திட்டத்தை டாடா புராஜெக்ட்ஸ் நிறுவனம் கட்டமைத்து வருகிறது.

புதிய கட்டிடத்தில் பிரம்மாண்டமான அரசியல் சட்ட மண்டபம், எம்.பி.க்களின் ஓய்வு அறைகள், பிரம்மாண்ட நூலகம், பல்வேறு நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்களுக்கான விசாலமான அறைகள், உணவு அருந்தும் பகுதி, மிகவும் விசாலமான வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட வசதிகள் இடம்பெற்றுள்ளன.

இதுதொடர்பாக மக்களவைச் செயலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘சென்ட்ரல் விஸ்டா என்று அழைக்கப்படும் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் கட்டுமானம் தற்போது நிறைவடைந்துள்ளது. இந்த புதிய கட்டிடம் சுயசார்பு இந்தியா திட்டத்தின் உணர்வை குறிக்கிறது. பழைய கட்டிடத்தில் உள்ள மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளிலும் எம்.பி.க்கள் அமர்வதற்கு போதிய இடவசதி இல்லை. இதனால் மக்கள் பிரதிநிதிகளின் பணித்திறன் பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்தே புதிய கட்டிடம் கட்ட மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி வரும் 28-ம் தேதி புதிய கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்துவைக்கிறார்’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x