Published : 24 May 2023 07:52 AM
Last Updated : 24 May 2023 07:52 AM

சர்வதேச சுற்றுலாத்தலங்கள் பட்டியலில் முதல் 50 இடங்களில் காஷ்மீர் இடம்பெறும்: ஜி20 கூட்டத்தில் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா நம்பிக்கை

மனோஜ் சின்ஹா

ஸ்ரீநகர்: சர்வதேச சுற்றுலாத்தலங்கள் பட்டியலில் முதல் 50 இடங்களுக்குள் ஜம்மு-காஷ்மீர் இடம்பிடிக்கும் என்று துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தெரிவித்தார்.

சுற்றுலாவை மேம்படுத்துவது தொடர்பான ஜி-20 நாடுகளின் ஆலோசனைக் கூட்டம் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேச தலைநகர் ஸ்ரீநகரில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொண்டு துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா பேசியதாவது:

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் அமைதி திரும்பத்தொடங்கியுள்ளது. யூனியன் பிரதேசத்தில் புதிதாக தொழிற்சாலைகள் வரத்தொடங்கி உள்ளன. வெளிநாட்டு முதலீட்டாளர்களும் இங்கு முதலீடு செய்வதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர்.

காஷ்மீரில் உள்கட்டமைப்பு வளர்ச்சிகள் மிகப் பெரிய அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. டிஜிட்டல் சமூகமாக காஷ்மீர் சமூகத்தை மாற்றுவதற்கான தொழில்நுட்ப முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது.

காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டில் முன் எப்போதும் இல்லாத அளவாக 1.80 கோடி சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து சென்றுள்ளனர்.

உள்நாட்டு உற்பத்தியில் காஷ்மீர் சுற்றுலாவின் பங்கு 7 சதவீதத்தைக் கடந்துள்ளது. 40 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டில் மட்டும் 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களின் படப்பிடிப்புகள் இங்கு நடந்துள்ளன. பாலிவுட் திரைத்துறை உடனான தனது உறவை காஷ்மீர் தற்போது புதுப்பித்து வருகிறது.

இதை கருத்தில் கொண்டு கடந்த 2021-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட காஷ்மீர் யூனியன் பிரதேச திரைப்படக் கொள்கை, அதிக முதலீடுகளை ஈர்த்துள்ளது.

சர்வதேச சுற்றுலாத்தலங்கள் பட்டியலில் உலக அளவில் முதல் 50 இடங்களுக்குள் காஷ்மீர் விரைவில் இடம்பிடிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

இனி உலகின் பல பகுதிகளில் இருந்தும் வரக்கூடிய சுற்றுலாப் பயணிகளால் காஷ்மீர் நிறைந்து காணப்படும் என்று நம்புகிறேன். சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவரக்கூடிய இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள் இங்கு அதிக அளவில் உள்ளன.

காஷ்மீரில் சுற்றுலாத்துறை என்பது தனித்து வளர முடியாது. சுற்றுலாத்துறை வளர்ச்சி பெற வேண்டுமானால் இங்கு நல்ல உட்கட்டமைப்பு வசதிகள், அதற்குஆதரவு கொள்கைகள், திறமையான மற்றும் பொறுப்பான நிர்வாகம் தேவை.

மிகவும் உயர்ந்த பனிச்சிகரங்கள், தெள்ளத் தெளிவான நீர்கொண்ட ஏரிகள், பசுமை கொஞ்சும் நிலப்பரப்புகள் போன்றவற்றை காஷ்மீர் ஒருங்கே பெற்றுள்ளது. காஷ்மீரில் பசுமை சுற்றுலாவை மேம்படுத்த மேலும் 300 புதிய சுற்றுலாத் தலங்களை அரசு கண்டறிந்துள்ளது.

இங்கு சுற்றுலாத்துறை வளர்ச்சிஅடைய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளை அமைத்தல், இளைஞர்கள் மற்றும் பெண் தொழில்முனைவோரை ஊக்குவித்தல், சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கு உள்ளூர் மக்களை பயன்படுத்துதல் போன்ற திட்டங்களை ஊக்குவிக்க உள்ளோம்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு கொண்டு வந்துள்ள வளர்ச்சித் திட்டங்களால் இங்கு பல துறைகள் வளர்ச்சி அடைந்துள்ளன. இதனால் எல்லை கடந்த தீவிரவாதிகளின் ஆதரவுடன் செழித்து வளர்ந்த தீவிரவாத அமைப்புகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு கிடைத்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவரக்கூடிய இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள் ஜம்மு காஷ்மீரில் அதிக அளவில் உள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x