Published : 24 May 2023 05:39 AM
Last Updated : 24 May 2023 05:39 AM
கொச்சி: ரயில் நிலையத்தில் நிற்காமல் சென்றுவிட்டு பிறகு அதே ரயில் நிலையத்தில் பயணிகளை இறக்கி, ஏற்றிச் செல்ல ரயில் ரிவர்ஸில் வந்த சம்பவம் கேரளாவில் நிகழ்ந்துள்ளது.
கேரள மாநிம், திருவனந்தபுரம் – ஷோரனூர் இடையே வேநாடு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் நேற்று முன்தினம் ஷோரனூர் நோக்கிச் செல்லும்போது, ஆலப்புழா மாவட்டம், செரியநாடு என்ற ரயில் நிலையத்தில் நிற்காமல் சென்றது.
மாவேலிக்கரா, செங்கனூர் எனும் முக்கிய ரயில் நிலையங்களுக்கு இடையில் செரியநாடு உள்ளது. இது ஒரு ‘டி கிரேடு’ ரயில் நிலையம் ஆகும். இந்த ரயில் நிலையத்தை காலையில் சுமார் 7.45 மணிக்கு வேநாடு எக்ஸ்பிரஸ் வந்தடையும். பின்னர் பயணிகள் இறங்கி, ஏறிய பிறகு அடுத்த சில நிமிடங்களில் புறப்பட்டுச் செல்லும். இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கத்துக்கு மாறாக ரயில் நிலையத்தை ரயில் கடந்த சென்றதால் பயணிகளும் ரயில் நிலைய அதிகாரிகளும் குழப்பம் அடைந்தனர். பிறகு சில நிமிடங்களில் அந்த ரயில் செரியநாடு ரயில் நிலையத்துக்கு ரிவர்ஸில் வந்ததும் அவர்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.
இதுகுறித்து ரயில்வே அதிகாரி ஒருவர் கூறும்போது, “செரியநாடு, ரயில் நின்று செல்லும் ஸ்டேஷன் மட்டுமே என்பதால் அங்கு சிக்னல் கிடையாது. இதனால் லோகோ பைலட்களால் இந்த தவறு ஏற்பட்டிருக்கலாம். என்றாலும் இது உடனடியாக அவர்களின் கவனத்துக்கு வந்து ரயில் நிறுத்தப்பட்டது. பிறகு சுமார் 700 மீட்டர் தூரம் ரயில் பின்னால் சென்று பயணிகளை இறக்கி, ஏற்றிச் சென்றது. இதனால் 8 நிமிடம் தாமதம் ஏற்பட்டது. பிறகு இந்த தாமதம் ஓட்டுநர்களால் சரிசெய்யப்பட்டுவிட்டது” என்று தெரிவித்தார்.
குழப்பம் ஏற்பட்டது: இதுகுறித்து கேரள ரயில் பயணிகள் சங்க நிர்வாகி ஒருவர் கூறும்போது, “அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ரயில் நிலையத்தில் பயணிகள் சிலரே இருந்தனர். ரயில் நிற்காமல் சென்றதும் அவர்களிடையே குழப்பம் ஏற்பட்டது. என்றாலும் இது சிறிய சம்பவம் என்பதால் நாங்கள் பெரிதுபடுத்த விரும்பவில்லை” என்றார்.
ரயில் நிற்காமல் சென்றதால் பெரிய பாதிப்பு இல்லை என்றாலும் அதுகுறித்து ரயில் ஓட்டுநர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது என அந்த ரயில்வே அதிகாரி மேலும் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT