Published : 23 May 2023 04:17 PM
Last Updated : 23 May 2023 04:17 PM
பெரேலி: திருமணப் பந்தலில் இருந்து மணமகன் தப்பித்து ஓட, அவரை விடாமல் 20 கிலோ மீட்டர் தூரம் துரத்திச் சென்ற மணப்பெண், அவரை மண்டபத்துக்கு அழைத்து வந்தார். உத்தரப்பிரதேச மாநிலம் பெரேலி மாவட்டத்தில்தான் இச்சம்பவம் நடந்துள்ளது.
பதான் மாவட்டத்தைச் சேர்ந்த அந்த இளைஞருடன் அந்தப் பெண் இரண்டரை ஆண்டு காலமாக காதலில் இருந்தார். இதனையடுத்தே இருவீட்டாரும் கலந்தாலோசித்து திருமணத் தேதியை முடிவு செய்தனர். அதன்படி ஞாயிறுக்கிழமையன்று பூதேஸ்வர் நாத் கோயிலில் திருமணம் நடத்துவதாக இருந்தது. ஆனால், திருமண நாளன்று வெகு நேரமாகியும் திருமண மேடைக்கு மணமகன் வரவில்லை. மணக்கோலத்தில் பெண் காத்திருக்க போனில் மணமகன் சாக்குப்போக்கு கூறி தட்டிக் கழிப்பதுபோல் பேசியுள்ளார்.
இதனால், சந்தேகமடைந்த மணப்பெண் சற்றும் தாமதிக்காமல் பேருந்து நிலையத்துக்குப் புறப்பட்டார். அது பெரேலியில் இருந்து 20 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. அவர் எதிர்பார்த்தது போலவே மணமகன் பேருந்து நிலையத்தில் பேருந்து ஏற காத்திருந்தார். பேருந்து நிலையம் என்றும் பாராமல் சண்டை போட்ட மணப்பெண் அவரை வலுக்கட்டாயமாக மண்டபத்துக்கு இழுத்துச் சென்றார்.
பிமோரா கோயிலில் திருமணம் நடைபெற்றது. இந்தச் செய்தி சமூக வலைதளங்களில் பரவ சிலர் கங்கணா ரனாவத் நடித்த குயின் படத்தை சுட்டிக்காட்டி விமர்சித்துள்ளனர். அதில் ஒரு நெட்டிசன் "அந்த குயின் மணமகன் ஓடியதால் தனியாக ஹனிமூன் கொண்டாடினார். இந்த குயின் மணமகன் ஓடினாலும் விடாமல் துரத்திச் சென்று திருமணத்தை முடித்துள்ளார்" என்று விமர்சித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT