Published : 23 May 2023 02:26 PM
Last Updated : 23 May 2023 02:26 PM
பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகர் பதவிக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் யு.டி.காதர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
கர்நாடக சட்டப்பேரவைக்கான தேர்தல் கடந்த 10ம் தேதி நடைபெற்று அதில் பதிவான வாக்குகள் கடந்த 13ம் தேதி எண்ணப்பட்டன. மொத்தமுள்ள 224 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 135 தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றியதை அடுத்து, அதன் முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக சிவகுமாரும் கடந்த சனிக்கிழமை பதவியேற்றுக்கொண்டனர்.
இந்நிலையில், புதிய சட்டப்பேரவையின் சபாநாயகர் பதவிக்கு 5 முறை எம்எல்ஏ-வாக பதவி வகித்த யு.டி.காதரை காங்கிரஸ் கட்சி அறிவித்தது. இதையடுத்து, முதல்வர், துணை முதல்வர் முன்னிலையில் அவர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். வழக்கமாக ஆளும் கட்சி நிறுத்தும் வேட்பாளரே சபாநாயகராக தேர்வு செய்யப்படுவார் என்பதால் யு.டி.காதர், சபாநாயகராவது ஏறக்குறைய உறுதியாகி உள்ளது. இதன் மூலம், இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் முதல்முறையாக கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகராக தேர்வு செய்யப்பட உள்ளார்.
முன்னதாக, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான ஆர்.வி.தேஷ்பாண்டே, ஹெச்.கே. பாடில் ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. எனினும், அவர்கள் சபாநாயகராக ஆர்வம் கட்டவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், காதரின் பெயரை காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா பரிந்துரைத்துள்ளார். இதையடுத்து அவர் ஏற்கப்பட்டதாக காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யு.டி. காதரின் பின்னணி: கர்நாடகாவின் உல்லால் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த யு.டி. ஃபரீத்-ன் மறைவை அடுத்து அத்தொகுதிக்கு கடந்த 2007ல் நடைபெற்ற இடைத் தேர்தலில் அவரது மகனான யு.டி. காதர் நிறுத்தப்பட்டார். இதில் வெற்றி பெற்று முதல்முறையாக கர்நாடக சட்டப்பேரவை உறுப்பினராக காதர் தேர்வானார். அதன்பிறகு அந்த தொகுதி மங்களூரு தொகுதியாக மாற்றப்பட்டது. தொடர்ந்து மங்களூரு தொகுதியில் போட்டியிட்டு காதர் 4 முறை வெற்றி பெற்றுள்ளார். கடந்த 2013-18ல் சித்தராமையா தலைமையிலான அரசில் உணவுத் துறை அமைச்சராக இருந்த காதர், 2018-19ல் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்துள்ளார். கடந்த முறை பாஜக ஆட்சியில் இருந்தபோது சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவராக காதர் இருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT