Published : 23 May 2023 04:17 AM
Last Updated : 23 May 2023 04:17 AM

வங்கிகளில் இன்று முதல் மாற்றலாம் - பெரும்பாலான ரூ.2000 நோட்டு செப்.30-க்குள் திரும்ப பெறப்படும்

புதுடெல்லி: வங்கிகளில் இன்று முதல் ரூ.2000 நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள நிலையில், புழக்கத்தில் இருக்கும் பெரும்பாலான ரூ.2000 நோட்டுகள் செப்.30-ம் தேதிக்குள் திரும்ப பெறப்பட்டுவிடும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ரூ.2000 நோட்டுகள் திரும்ப பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி கடந்த வாரம் அறிவிப்பு வெளியிட்டது. இதன்பிறகு, ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் நேற்று முதல்முறையாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

மேற்கத்திய நாடுகளில் சில முக்கிய வங்கிகள் செயலிழப்பு, உக்ரைன் போர் ஆகியவை காரணமாக சர்வதேச நிதி சந்தை நெருக்கடியை சந்தித்துள்ளது. இந்த கடினமான சூழலிலும் இந்திய கரன்சி நிர்வாக முறை வலுவானதாகவும், அதன் மாற்று விகிதம் நிலையானதாகவும் உள்ளது.

கடந்த 2016-ல் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு வாபஸ் பெறப்பட்ட நோட்டுகளின் இடத்தை நிரப்பவே ரூ.2,000 மதிப்பில் கரன்சி நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன. தற்போது அதற்கான தேவை நிறைவேறியுள்ளதை அடுத்து, ரூ.2000 நோட்டுகளை திரும்ப பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நோட்டுகளை வைத்திருப்போர் வங்கிகளில் நேரடியாக செலுத்தி, வேறு நோட்டுகளை பெற்றுக் கொள்ளலாம்.

ஒட்டுமொத்த நோட்டுகளின் புழக்கத்தில் ரூ.2000 நோட்டுகளின் பங்களிப்பு வெறும் 10.8% மட்டுமே. எனவே, இதை திரும்ப பெறும் முடிவு பொருளாதாரத்தில் மிகமிக குறைவான தாக்கத்தையே ஏற்படுத்தும். ஏற்கெனவே இவை நன்கு புழக்கத்தில் இருந்தபோதுகூட அதை வாங்க கடைக்காரர்களிடம் தயக்கம் இருந்தது. எனவே, இது புதிய விஷயம் இல்லை. புழக்கத்தில் உள்ள பெரும்பாலான ரூ.2000 நோட்டுகள் செப்.30-ம் தேதிக்குள் வங்கிகளில் திரும்ப செலுத்தப்பட்டுவிடும் என எதிர்பார்க்கிறோம். நோட்டுகளை மாற்றிக் கொள்ள 4 மாத அவகாசம் உள்ளது. நோட்டுகளை மாற்றுவதில் சிரமம் ஏற்படும்பட்சத்தில், சூழலுக்கேற்ப உரிய விதிமுறைகளை வெளியிடவும் ரிசர்வ் வங்கி தயாராக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

வங்கிகளில் இன்று (மே 23) முதல் ரூ.2000 நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x