Published : 23 May 2023 05:15 AM
Last Updated : 23 May 2023 05:15 AM
புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தியை பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் நேற்று டெல்லியில் சந்தித்துப் பேசினார். அப்போது 2024 மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பது குறித்து ஆலோசனை நடத்தினர்.
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளும் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சியில் பிஹார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ் குமார் ஈடுபட்டுள்ளார். இதன்படி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை நிதிஷ் குமாரும் பிஹார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவும் கடந்த மாதம் சந்தித்துப் பேசினர்.
இதையடுத்து, மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, ஒடிசா முதல்வரும் பிஜு ஜனதா தள தலைவருமான நவீன் பட்நாயக், சிவசேனா (யுபிடி) தலைவர்உத்தவ் தாக்கரே உள்ளிட்டோரையும் இவர்கள் சந்தித்துப் பேசினர்.
இதையடுத்து, கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டம் பிஹார் தலைநகர் பாட்னாவில் நடைபெறும் என நிதிஷ் குமார் கடந்த மாத இறுதியில் கூறியிருந்தார். இதில் எதிர்க்கட்சிகள் கூட்டாக தேர்தலை சந்திப்பது தொடர்பாக ஆலோசிக்கப்படும் என கூறியிருந்தார்.
இந்நிலையில், நிதிஷ் குமார் ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அர்விந்த் கேஜ்ரிவாலை அவரது இல்லத்தில் நேற்று முன்தினம் சந்தித்தார். அப்போது, டெல்லி அரசு உயர் அதிகாரிகளை கட்டுப்படுத்தும் விவகாரத்தில் மத்திய அரசுடன் ஏற்பட்டுள்ள மோதல் விவகாரத்தில் முழு ஆதரவு அளிப்பதாக கேஜ்ரிவாலிடம் நிதிஷ் உறுதி அளித்தார்.
இந்த சூழலில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை நிதிஷ் குமார் டெல்லியில் நேற்று மீண்டும் சந்தித்துப் பேசினார்.
கார்கே இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, காங்கிரஸ் பொதுச் செயலார் கே.சி.வேணுகோபால் மற்றும் ஐக்கிய ஜனதா தள மூத்த தலைவர் லலன் சிங் ஆகியோரும் உடன் இருந்தனர்.
இந்த சந்திப்பின்போது, வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பது குறித்து ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது. மேலும் எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்தை பாட்னாவில் நடத்துவது குறித்தும் ஆலோசனை நடத்தினர்.
கர்நாடக முதல்வராக சித்தராமையா கடந்த 20-ம் தேதி பதவியேற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில், எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைப்பை பறைசாற்றும் வகையில், நிதிஷ் குமார், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், தேசிய மாநாடு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT