Published : 22 May 2023 07:10 PM
Last Updated : 22 May 2023 07:10 PM
புதுடெல்லி: எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் விரைவில் நடைபெற உள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் ராகுல் காந்தியை, பிகார் முதல்வர் நிதிஷ் குமார் சந்தித்ததை அடுத்து, காங்கிரஸ் அமைப்பு பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் இதனைத் தெரிவித்தார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வேணுகோபால், "எதிர்க்கட்சிகளின் கூட்டம் விரைவில் கூட இருக்கிறது. தேதி மற்றும் இடம் குறித்த அறிவிப்பு இன்னும் 1-2 நாட்களில் வெளியிடப்படும். இந்த கூட்டத்தில் அதிக எண்ணிக்கையில் எதிர்க்கட்சிகள் பங்கேற்கும்" எனக் கூறினார்.
எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணிகளை பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் மேற்கொண்டு வருகிறார். இதற்காக, பல்வேறு கட்சித் தலைவர்களை அவர் தொடர்ந்து சந்தித்து வருகிறார். ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவாலை நேற்று சந்தித்து நிதிஷ் குமார் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை, டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார். அப்போது, ராகுல் காந்தியும் உடன் இருந்தார். இந்த சந்திப்பின்போது, எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை விரைவில் கூட்டுவது தொடர்பாக ஆலோசித்தனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தை அடுத்து இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்ட மல்லிகார்ஜூன கார்கே, "நாடு தற்போது ஒருங்கிணைய உள்ளது. ஜனநாயகம் வலிமை மிக்கது என்பதுதான் நமது செய்தி. தற்போதைய அரசியல் சூழல் குறித்தும், நாட்டை புதிய பாதையில் முன்னேற்றிச் செல்வது குறித்தும் பிஹார் முதல்வர் நிதிஷ் குமாருடன் நானும் ராகுல் காந்தியும் ஆலோசனை மேற்கொண்டோம்" என தெரிவித்திருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT