Published : 22 May 2023 04:14 PM
Last Updated : 22 May 2023 04:14 PM

“புகார் அளித்த அனைத்துப் பெண்களும் நார்கோ சோதனைக்கு தயார்” - பிரிஜ் பூஷனுக்கு மல்யுத்த வீராங்கனைகள் பதில்

கோப்புப்படம்

புதுடெல்லி: வினேஷ் போகத் மட்டுமல்ல மல்யுத்த கூட்டமைப்புத் தலைவர் பிரிஜ் பூஷன் மீது பாலியல் துன்புறுத்தல் புகாரளித்துள்ள அத்தனைப் பெண்களும் உண்மை கண்டறியும் சோதனைக்குத் தயார் என்று மல்யுத்த வீராங்கனைகள் தெரிவித்துள்ளனர்.

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷனை கைது செய்ய வலியுறுத்தி டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீராங்கனைகள் திங்கள்கிழமை செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய வினேஷ் போகத்,"அவர் (பிரிஜ் பூஷன் சரண் சிங்) என் பெயரையும், பஜ்ரங் புனியா பெயரை மட்டும் குறிப்பிட்டுள்ளார். நாங்கள் இருவர் மட்டும் இல்லை அவர் மீது புகார் அளித்திருக்கும் அத்தனைப் பெண்களும் உண்மை கண்டறியும் சோதனைக்கு தயாராக இருக்கிறோம். அந்தச் சோதனை நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட வேண்டும். இந்த நாட்டின் மகள்களுக்கு அவர் என்னவெல்லாம் செய்துள்ளார் என்பதை நாட்டுமக்கள் பார்க்கட்டும்" என்று தெரிவித்தார்.

முன்னதாக ஞாயிற்றுக்கிழமை பேஸ்புக் பதிவொன்றில் பிரிஜ் பூஷன்,“பஜ்ரங் புனியா மற்றும் வினேஷ் போகத் ஆகியோர் நார்கோ சோதனைக்கு தயார் என்றால் நானும் சோதனைக்கு தயார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அதை நான் உறுதியாக சொல்கிறேன். தற்போது போராடிக் கொண்டிருப்பவர்களை தவிர யாரை வேண்டுமானாலும் கேட்டுப் பாருங்கள் நான் தவறாக நடந்து கொண்டேன் என சொல்லவே மாட்டார்கள். எனது 11 ஆண்டுகால வாழ்வை நம் நாட்டின் மல்யுத்தத்திற்காக கொடுத்துள்ளேன். நான் என்னுடைய வார்த்தைகளில் இன்றும் உறுதியாக இருக்கிறேன். நாட்டுமக்களுக்கு உண்மையாக இருப்பேன் என்று தெரிவித்துக்கொள்கிறேன். ஜெய் ஸ்ரீராம்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பிரபல மல்யுத்த வீராங்கனைகளான வினேஷ் போகத், சாக்சி மாலிக் உள்ளிட்ட 7 பேர் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தினர். இது தொடர்பாக பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது கடந்த மாதம் 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 23 முதல் மல்யுத்த வீராங்கனைகள் மற்றும் வீரர்கள் தொடர்ந்து தலைநகர் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தங்களின் போராட்டத்தை விவசாயிகளின் ஆதரவோடு அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் முடிவில் மல்யுத்த வீராங்கனைகள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x