Published : 04 Oct 2017 09:33 AM
Last Updated : 04 Oct 2017 09:33 AM

மழை பெய்ய வேண்டுதல் நிறைவேறியதால் ஏழுமலையானுக்கு தமிழக முதல்வர் நேர்த்திக்கடன்

‘‘தமிழகத்தில் நிலவும் வறட்சியை போக்க மழை பெய்ய வேண்டுமென வேண்டிக்கொண்டதற்கு நல்ல பலன் கிடைத்ததால் ஏழுமலையானுக்கு நேர்த்திக்கடன் செலுத்த வந்தேன்’’ என தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய திங்கள்கிழமை மாலை தனது குடும்பத்தாருடன் திருமலைக்கு வந்தார். அவரை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் திருமலையிலுள்ள வராக சுவாமியை தரிசனம் செய்தார். அதன்பின்னர் இரவு திருமலையில் தங்கினார். இதனைத் தொடர்ந்து நேற்று காலை நைவேத்திய இடை வேளையில் முதல்வர் பழனிசாமி தனது குடும்பத்தாருடன் சென்று ஏழுமலையானை தரிசனம் செய்தார். அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் தரிசன ஏற்பாடுகள் செய்தனர். பின்னர் அவருக்கு ரங்கநாயக மண்டபத்தில் தீர்த்த பிரசாதங்கள் கொடுத்து ஆசீர்வாதம் செய்தனர்.

அப்போது அவர் திருப்பதி தேவஸ்தான தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: தமிழகத்தில் போதிய மழை இன்றி வறட்சி நிலவியது. இதனால் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டனர். கடந்த முறை நான் திருமலைக்கு வந்தபோது, தமிழகத்தில் வறட்சியை போக்கி, விவசாயம் செழிக்க போதிய மழை பெய்ய வேண்டுமென எல்லாம் வல்ல ஏழுமலையானை வேண்டிக்கொண்டேன். அதன் படியே நல்ல மழை பெய்தது. இதற்கு நன்றி தெரிவித்து, நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் தற்போது குடும்பத்துடன் ஏழுமலையானை தரிசனம் செய்துக்கொண்டேன். எனக்கு திருப்பதி ஏழுமலையான் மீது மிகுந்த நம்பிக்கை உள்ளது. இவ்வாறு முதல்வர் பழனிசாமி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x