Published : 22 May 2023 07:23 AM
Last Updated : 22 May 2023 07:23 AM
பெங்களூரு: கர்நாடக முதல்வர் சித்தராமையா பதவியேற்பு விழாவில் பங்கேற்க, 2024 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையில் கூட்டணி அமைக்கும் நோக்கில் 25-க்கும் மேற்பட்ட கட்சிகளுக்கு அக்கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அழைப்பு விடுத்திருந்தார். இதில் 19 கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் கடந்த வெள்ளிக்கிழமை இரவு விமானம் மூலம் பெங்களூரு வந்தார்.
அன்றிரவு பெங்களூருவில் உள்ள தனது சகோதரி செல்வியின் வீட்டில் தங்கிய ஸ்டாலின் சனிக்கிழமை காலை பலத்த பாதுகாப்புடன் பதவியேற்பு விழா நடக்கும் கண்டீரவா ஸ்டேடியத்துக்கு அழைத்து வரப்பட்டார். அங்குள்ள விவிஐபி வரவேற்பு அறையில் சில நிமிடங்கள் அமர்ந்திருந்த அவர் முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, விசிக தலைவர் தொல்.திருமாவளவன், மநீம தலைவர் கமல்ஹாசனுடன் சிறிது நேரம் உரையாடினார்.
பின்னர் மேடைக்கு அழைத்துவரப்பட்ட ஸ்டாலின் காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் அருகில் பிரதான இடத்தில் அமர வைக்கப்பட்டார். மேடைக்கு வந்த காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, பிஹார் முதல்வர் நிதிஷ்குமார், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர்கள் மெகபூபா முப்தி, ஃபரூக் அப்துல்லா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி ஆகியோரிடம் சில நிமிடங்கள் பேசினார்.
ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கேவிடம் நிதிஷ் குமார், டி.ராஜா ஆகியோர் நெருக்கமாக நீண்ட நேரம் பேசிய போதும், ஸ்டாலின் அவர்களுடன் பேசாமல் அமைதியாக இருந்தார். 19 கட்சிகளின் தலைவர்கள் அவரை சூழ்ந்திருந்த போதும் தனிமையில் இருப்பதைப் போல அமர்ந்திருந்தார். அதேவேளையில் டி.ஆர்.பாலுவுடன் மட்டும் பேசிக் கொண்டிருந்தார்.
கர்நாடக முதல்வராக பதவியேற்ற சித்தராமையா, துணை முதல்வராக பதவியேற்ற டி.கே.சிவகுமாரை வாழ்த்தி, நினைவுப் பரிசை வழங்கினார்.
முதல்வர், அமைச்சர்கள் பதவியேற்ற மேடை மிகவும் சிறியதாக இருந்ததால் ஆளுநர் அலுவலக ஊழியர்கள், கட்சிகளின் தலைவர்கள், பாதுகாப்பு வீரர்கள், புகைப்பட கலைஞர்கள், பதவியேற்ற அமைச்சர்களுக்கு இடையே இட நெருக்கடி ஏற்பட்டது.
பதவியேற்பு விழா முடிந்த பின்னர் நிகழ்ச்சியில் பங்கேற்ற 19 கட்சிகளின் தலைவர்களையும் கார்கே, ராகுல், பிரியங்காவுடன் கை உயர்த்த காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் துரிதமாக ஏற்பாடு செய்தார்.
ஆனால், மேடையில் இரு புறங்களில் இருந்த மைக், டேபிள், நாற்காலி போன்றவற்றால் இடப்பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் ராகுல், பிரியங்காவுக்கு மத்தியில் நிறுத்திவைக்கப்பட்ட மு.க.ஸ்டாலின் கூட்ட நெருக்கடியில் பின்னுக்குத் தள்ளப்பட்டார்.
மேலும் இடப்பக்க ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த திருமாவளவனுக்கும் இடம் கிடைக்காமல் அல்லாடினார். வலப்பக்க ஓரத்தில் நின்றிருந்த கமல்ஹாசனுக்கும் இடம் கிடைக்காததால் பின்வரிசைக்கு தள்ளப்பட்டார்.
இதேபோல தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் ஆகியோரும் இட நெருக்கடியால் பின்னுக்கு தள்ளப்பட்டனர். மேடை மிகவும் குறுகலானதாக இருந்ததால் 19 தேசிய கட்சிகளின் தலைவர்களின் கையை உயர்த்தும் குழு புகைப்படத்தில் பெரும்பாலானோர் இடம்பெற முடியாத நிலை ஏற்பட்டது.
இந்த குளறுபடிகளால் அதிருப்தி அடைந்த மு.க.ஸ்டாலின் பதவியேற்பு விழா முடிந்து காங்கிரஸ் தலைவர்கள் பேசிக் கொண்டிருந்தபோதே அங்கிருந்து வெளியேறினார். இதற்கு பின்னர் ஷாங்கிரி லா நட்சத்திர விடுதியில் பெரும்பாலான கட்சித் தலைவர்கள் ராகுல் காந்தியுடன் பங்கேற்ற விருந்து நிகழ்ச்சியிலும் பங்கேற்கவில்லை.
முன்னதாக மேடைக்கு வந்த கமல்ஹாசனை அதிகாரிகள் விஐபிகள் அமரும் இடத்தில் அமர வைத்தனர்.அங்கு சிறிது நேரம் அவர் தனியாக அமர்ந்திருந்ததை கவனித்த அதிகாரிகள், பதவியேற்பு விழா மேடைக்கு அழைத்து வந்தனர். இதேபோல தமிழக சட்டப்பேரவைக் குழு தலைவர் செல்வபெருந்தகைக்கு முறையான இருக்கை ஒதுக்கப்படாததால் விஐபி கேலரியில் 3வது வரிசையில் அமர வைக்கப்பட்டார்.
மேடையில் தமிழக தலைவர்களுக்கு கூட்ட நெருக்கடியால், போதிய முக்கியத்துவம் கிடைக்காத நிலையிலும், கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் அவர்களுடன் மிகுந்த அன்போடு பழகினர்.
மு.க.ஸ்டாலின், டி.ராஜா, திருமாவளவன், கமல்ஹாசன் ஆகியோருடன் மல்லிகார்ஜூன கார்கே, சித்தராமையா, டி.கே.சிவகுமார் உள்ளிட்டோர் வாஞ்சையோடு பேசியதையும் கவனிக்க முடிந்தது.
கர்நாடக தமிழர்கள் விருப்பம்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கர்நாடகாவில் வாழும் 60 லட்சத்துக்கும் அதிகமான தமிழர்களின் பிரதிநிதிகளான தமிழ் அமைப்பினர் எவரையும் சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை. கர்நாடக திமுக நிர்வாகிகளையும் சந்திக்கவில்லை. ஸ்டாலின் தங்களை சந்தித்துப் பேசி, தங்களின் பிரச்சினைகளை புதிய முதல்வர் சித்தராமையாவிடம் தெரிவிப்பார் என எதிர்ப்பார்ப்புடன் இருந்த கர்நாடக தமிழர்கள் இப்படி ஒரு சந்திப்பு விரைவிலாவது நடக்க வேண்டும் என ஆவலுடன் உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT