Last Updated : 25 Oct, 2017 10:46 AM

 

Published : 25 Oct 2017 10:46 AM
Last Updated : 25 Oct 2017 10:46 AM

காற்று மாசை நீக்க பிரதமர் தலையிடுவது அவசியம்

ட இந்தியா முழுவதும் காற்றில் கரி, கந்தகத் துகள்கள் அதிக அளவில் கலந்து குழந்தைகள், முதியவர்களின் உயிருக்கு உலை வைக்கும் தேசிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதை எதிர்கொள்ள மத்திய அரசு, மாநில அரசுகள், அரசின் பல்வேறு துறைகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், மக்கள் அமைப்புகள் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த தீவிரச் செயல்பாடு அவசியம். அப்படியின்றி அவரவர், தங்கள் மனசாட்சிக்குக் கட்டுப்பட்டு ‘ஏதோ தன்னால் முடிந்தது’ என்று துண்டுதுண்டாக எடுக்கும் நடவடிக்கைகளால் பலன் கிடைக்காது.

ஊடகங்கள் இவற்றில் சிலவற்றை எட்டுக்காலம் தலைப்பிட்டு அமர்க்களமாகக் கொண்டாடுகின்றன. நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்டவர்கள் அதையே தங்களுடைய வெற்றியாகப் பெருமிதப்பட்டுக் கொள்கின்றனர். நிரந்தரமான முடிவு ஏற்பட வேண்டும் என்றால் அதற்கு தீர்க்கமாக சிந்தித்து, உறுதியாகப் போராடி, தொடர்ந்து செயல்பட்டால்தான் வெற்றி பெற முடியும். ‘

சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள் - நீதிபதிகளின் கூட்டு நடவடிக்கையால் 1990-களிலிருந்து இந்தப் பிரச்சினை மீது தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்பதில் சந்தேகம் இல்லை. பொதுநல வழக்கு போராளி எம்.சி. மேத்தா, சுற்றுச்சூழல் நீதிபதி குல்தீப் சிங் கூட்டணியில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தில்லி மாநகர பொது போக்குவரத்தில் டீசலுக்குப் பதிலாக சிஎன்ஜி எனப்படும் இயற்கை எரிவாயு பயன்படுத்தப்படுகிறது. இதனால் மாநகரின் காற்றில் அசுத்தம் குறைந்து, தரம் கூடியது. ஆனால் பத்தாண்டுகளுக்கு முன்னர் மட்டுமே அது உச்சபட்சப் பலனைத் தந்தது. அதற்குப் பிறகு எடுக்கப்பட்ட, அறிவிக்கப்பட்ட நடவடிக்கைகள் மக்களின் கவனத்தைப் பெறுவதற்கானவை, ஆணவம் நிறைந்தவை. ‘உங்களுக்கு எது நல்லது என்று - சமூக ஆர்வலர்கள், நீதிபதிகள், ஊடகங்கள் ஆகிய - எங்களுக்கு மட்டுமே தெரியும்’ என்ற தொனியிலானவை.

தில்லியின் காற்று அசுத்தமாகிவிட்டது தீராத பிரச்சினைதான்; ஆனால் அதற்கான தீர்வுகள் சரியாக சிந்திக்காமல் அமல்படுத்தப்பட்டதால் மிகப் பெரிய பிரச்சினைகளை மக்களுக்கு ஏற்படுத்தின. குடிசைத் தொழில்கள்தான் காற்று மாசுக்குக் காரணம் என்று முடிவெடுத்து, நகரிலிருந்து பவானா என்ற புறநகருக்கு மாற்றச்சொல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. அங்கு தொழில்பிரிவுகளும் மக்களும் குடியேற அடித்தளக் கட்டமைப்புகளை உருவாக்காமல், அதற்கான நேரத்தையும் தராமல், அதில் வேலை செய்தவர்களின் துயரங்களையும் கருதாமல் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு அது. பொதுப் போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்யாமலே தொழில்பிரிவுகளை மாற்றினார்கள். ஏராளமான தொழிலாளர்கள் வேலையிழந்தனர். புதிய இடத்தில் சேரிகள் தோன்றின. நில ஆக்கிரமிப்பு மாஃபியாக்கள் பல இடங்களைச் சட்டவிரோதமாகக் கைப்பற்றி அதிக விலைக்கு மனைகளை விற்றன. நகரின் மையத்தில் ஏற்பட்ட தொழிற்சாலை மாசு, புற நகரத்துக்கு மாற்றப்பட்டது.

அதிகாரமும் அந்தஸ்தும் நிரம்பிய மேல்தட்டு சமூகம் தனக்கிருந்த உரிமைகள், சலுகைகள் காரணமாக காற்று மாசு என்ற சீர்கேட்டை ஏழைகள் தலைமீது மாற்ற முடிந்தது. தொழிற்சாலைகளிலிருந்து கிளம்பும் நச்சுப்புகை நகராட்சி எல்லை, தேசிய எல்லை என்று பார்ப்பதில்லை; காற்று பலமாக வீசினால் தன் போக்கில் பரவுகிறது என்று நவீன சுற்றுச்சூழல் செயல்பாட்டின் தந்தை லெஸ்டர் பிரௌன் 1972-ல் வெளியிட்ட அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார்.

2015-ல் ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் அதிகாரத்துக்கு வந்தது. ஊழலுக்கு எதிராகப் போரிட்டவர்கள் அடுத்து சுற்றுச்சூழல் மாசுக்கு எதிராகவும் போர் தொடுக்கத் தொடங்கினார்கள். ஆரவாரமான வெற்று நடவடிக்கைகளை அடுத்த தளத்துக்குக் கொண்டு சென்றார்கள். என்னுடைய நண்பர் ராஜ்கோபால் சிங் அவற்றைத் தொகுத்திருக்கிறார்.

முதலில் அவர்கள், கார் – ஸ்கூட்டர்களில் ஒற்றை இலக்க வண்டிகள் ஒரு நாளும், இரட்டை இலக்க வண்டிகள் இன்னொரு நாளும் போக வேண்டும் என்றார்கள். அதனால் காற்று மாசு குறையவில்லை. அடுத்து, நகரின் ஐந்து இடங்களில் மாபெரும் காற்று சுத்திகரிப்பு இயந்திரங்களை நிறுவுவோம், பனிப்படலத் திரையை ஏற்படுத்துவோம், மெய்நிகர் புகைபோக்கிகளை அமைப்போம் என்றார்கள். 2016 அக்டோபர் வரையில் சோதனை அடிப்படையில்கூட இதில் ஒன்றையும் அவர்கள் செய்யவில்லை.

சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாட்டு ஆணையம் (இபிசிஏ), உச்ச நீதிமன்றம், தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ஆகியவை தத்தமது நோக்கில், தங்கள் பங்குக்கு ஒவ்வொன்றை செய்து கொண்டிருக்கின்றன. வாகனங்களுக்குக் கட்டுப்பாடு, மாற்று எரிபொருள் போன்றவை சில. மாசு கட்டுப்பாட்டு ஆணையம் இந்த ஆண்டு பிப்ரவரி முதல் தேதியிலும் ஏப்ரல் 4-ம் தேதியிலும் தான் எடுக்க உத்தேசிக்கும் நடவடிக்கைகளை உச்ச நீதிமன்றத்திடம் தெரிவித்தது. அவை நல்ல நோக்கம் கொண்டவை, உலகமே சீர்பட உதவக்கூடியவை. ஆனால் அமல்படுத்த முடியாதவை. சுற்றுச்சூழல் நிர்வாகத்தில் பெரிய புரட்சி ஏற்பட்டால்தான் அவை சாத்தியம். ஆணையத்தின் ஒவ்வொரு திட்டத்தையும் அமல்படுத்த வேண்டும் என்றால் உச்ச நீதிமன்றம் முழு நேர அமர்வு (பெஞ்ச்) ஒன்றை ஏற்படுத்த வேண்டும், அல்லது உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் தினந்தோறும் அதிக எண்ணிக்கையில் கூடி, நடவடிக்கைகளை மேற்பார்வையிட வேண்டும். இது நடைமுறையில் சாத்தியமில்லை.

சுற்றுச்சூழல் ஆணையம் என்ற அமைப்பு இருபதாவது ஆண்டாகச் செயல்படுகிறது. 1998-ல் இதன் தலைவராக வந்த பூரே லால் ஆணையத் தலைவராக தனது பதவிக்காலத்தில் உச்ச நீதிமன்றத்தின் 17 தலைமை நீதிபதிளைப் பார்த்துவிட்டார். இந்த இடைப்பட்ட காலத்தில் தில்லி மாநகர காற்றின் மாசு குறைந்து தூய்மையடைந்திருந்தால் பாராட்டலாம்.

உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் உள்ள குழுக்கள், ஆணையங்களால் எதையும் சாதித்துவிட முடியாது. பிரதமர் தலைமையில் அரசியல் அதிகாரமுள்ள அமைப்பை ஏற்படுத்தியாக வேண்டும். அனைத்து முதலமைச்சர்களுக்கும் இலக்கு நிர்ணயித்து, அதை நிறைவேற்றுவதைக் கட்டாயமாக்க வேண்டும்.

தமிழில்: ஜூரி

சேகர் குப்தா, ‘தி பிரின்ட்’ தலைவர், முதன்மை ஆசிரியர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x