Published : 21 May 2023 06:14 PM
Last Updated : 21 May 2023 06:14 PM

எதிர்ப்புகள் எதிரொலி: முஸ்லிம் இளைஞருடனான மகளின் திருமணத்தை நிறுத்திய உத்தராகண்ட் பாஜக பிரமுகர்

டேராடூன்: உத்தராகண்ட் மாநில பாஜக பிரமுகர் யஷ்பால் பேனம் தன் மகளுக்கு அவர் காதலித்த முஸ்லிம் இளைஞரை திருமணம் செய்துவைக்கவிருந்த நிலையில், கட்சியினர் மற்றும் இந்து அமைப்பினரின் கடும் எதிர்ப்பு காரணமாக அத்திருமணத்தை நிறுத்துவதாக அறிவித்துள்ளார்.

உத்தராகண்டின் பவுரி நகர முனிசிபல் தலைவர் யஷ்பால், அத்தொகுதியின் முன்னாள் எம்எல்ஏவும் ஆவார். இவருக்கு ஒரு மகள் இருக்கிறார். லக்னோ பல்கலைகழகத்தில் பயின்று வந்த அவரின் மகள், அங்குமுகமது மோனிஸ் என்ற முஸ்லிம் இளைஞரை காதலித்து வந்தார். அந்த இளைஞர் உத்தரப் பிரதேசத்தின் அமேதியை சேர்ந்தவர். இவர்கள் இருவரது திருமணம் வரும் மே 28 இல் நடைபெறவிருந்தது. இந்நிலையில் இந்தத் திருமணத்திற்கு உத்தராகண்ட் மாநிலத்தின் பல இந்துத்துவா அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட் ஆகிய இரு மாநிலங்களிலும் சமூக வலைதளங்களில் பரவிய திருமண அழைப்பிதழ் காரணமாக கடுமையான விமர்சனங்களும் எழுந்தன.

உத்தராகண்டின் விஷ்வ இந்து பரிஷத் (விஎச்பி), பைடவ் சேனா மற்றும் பஜ்ரங் தளம் ஆகிய அமைப்பினர் ஒன்றுகூடி, பவுரிக்கு எதிராக கூட்டம் நடத்தினர். அவரது கொடும்பாவியையும் எரித்தனர்.

இந்நிலையில் அவர் தனது மகளின் திருமணத்தை நிறுத்துவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர், "எனது மகள் அவரின் விருப்பத்தின் பேரிலேயே முஸ்லிம் இளைஞரை திருமணம் செய்யவிருந்தார். இரு குடும்பங்களும் அதை ஒப்புக் கொண்டு திருமணத்தை நடத்தவிருந்தோம். ஆனால் இப்போது அந்தத் திருமணம் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. எனது மகள் மற்றும் அவரின் காதலரின் நலன் கருதியே திருமணத்தை இருவீட்டாரும் ஒப்புக் கொண்டோம். ஆனால் அழைப்பிதழ் சமூக வலைதளங்களில் வெளியானதில் இருந்தே எதுவும் உகந்ததாக நடைபெறவில்லை.

அதனால் மே 28ல் நடைபெறவிருந்த திருமணம் நிறுத்தப்படுகிறது. இருவீட்டாரும் இணைந்தே இந்த முடிவை எடுத்துள்ளோம். இருப்பினும் இத்திருமணத்தை பின்னாளில் நடத்துவதா இல்லையா என்பது குறித்து பின்னர் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x