Published : 20 May 2023 04:57 PM
Last Updated : 20 May 2023 04:57 PM
புதுடெல்லி: ரூ.2,000 நோட்டுகள் வாபஸ் பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “முன்பு செய்த தவறுகளை மறைக்கவே இப்போது ரூ.2000 நோட்டுகளையும் பணமதிப்பிழப்பு செய்துள்ளார்களா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னதாக நேற்று, இந்திய ரிசர்வ் வங்கி ரூ.2000 நோட்டுகளை புழக்கத்தில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளதாக அறிவித்தது. இதையடுத்து, மக்கள் தங்கள் கைவசம் உள்ள ரூ.2000 நோட்டுகளை மே 23-ம் தேதி முதல் வங்கிகள் மூலமாக மாற்றிக்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கு செப்.30-ம் தேதி வரை அவகாசம் தரப்பட்டுள்ளது. அனைத்து ரூ.2000 நோட்டுகளையும் புழக்கத்தில் இருந்து அகற்ற முடிவெடுத்துள்ள நிலையில், வங்கிகள் அந்த நோட்டுகளை பொதுமக்களுக்கு விநியோகிக்க கூடாது என்று ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியது. இந்நிலையில் இந்த முடிவை அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டித்து வருகின்றனர்.
கார்கே தாக்கு: காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “முன்னர் செய்த பணமதிப்பிழப்பு மூலம் நீங்கள் இந்திய பொருளாதாரத்தின் மீது ஆழமான புண்ணை ஏற்படுத்தினீர்கள். அந்த நடவடிக்கையால் தேசத்தின் ஒட்டுமொத்த அமைப்புசாரா தொழில்களும் அழிந்துபோயின. நிறைய குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அழிக்கப்பட்டன.
இப்போது இரண்டாவது முறையாகவும் ஒரு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கொண்டு வந்துள்ளீர்கள். முதலில் செய்த தவறுகளை மூடி மறைக்க இரண்டாம் முறையாக பணமதிப்பிழப்பு செய்யப்பட்டுள்ளதா? இந்த ஒட்டுமொத்த பணமதிப்பிழப்பு நடவடிக்கைகள் குறித்து சுதந்திரமான நடுநிலையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அத்தகைய விசாரணை மட்டுமே உண்மையை வெளிக்கொண்டு வரும்” என்று கார்கே குறிப்பிட்டுள்ளார்.
கபில் சிபல் விமர்சனம்: முன்னாள் காங்கிரஸ் அமைச்சரும், தற்போதைய சுயேச்சை எம்.பி.யுமான கபில் சிபலும் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். "கடந்த 2016-ஆம் ஆண்டு மத்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. அப்போது புழக்கத்தில் இருந்த நோட்டுகளின் மதிப்பு ரூ.17.7 லட்சம் கோடி. அது அத்தனையுமே ஊழல் பணம் என்பது போல் மத்திய அரசு வாதிட்டது. ஊழலை ஒழிக்க ரூ.1000, ரூ.500 நோட்டுகளை பணமதிப்பிழப்பு செய்ததாகக் கூறுகிறது. இப்போது 2022-ல் புழக்கத்தில் உள்ள நோட்டுகளின் எண்ணிக்கை ரூ.30.18 லட்சம் கோடி. அப்படியென்றால், 2016-ல் இருந்ததைவிட இப்போது ஊழல் பணத் தொகை அதிகரித்துள்ளதா பிரதமர் அவர்களே" என்று ட்விட்டரில் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மஹூவா மொய்த்ரா கேள்வி: திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. மஹூவா மொய்த்ரா, "எந்த ஒரு பண்பட்ட தேசமும் தம் மக்களை இப்படியாக எப்போதும் பணத்தின் மீது அச்சம் கொண்டிருக்கும்படி செய்யாது. இங்கே தான் மக்கள் எப்போது தங்கள் பணம் டாய்லட் தாளாகுமோ என்ற அச்சத்தில் உள்ளனர். ஒவ்வொரு சில ஆண்டுகளுக்கு ஒருமுறை எங்களது வேலட்டுகள் ஏன் வெற்றாவதை நாங்கள் எதிர்கொள்ள வேண்டும். கர்நாடகாவில் தோற்றுவிட்டு அதை திசைதிருப்ப பாஜக இதனைச் செய்துள்ளது. ஆனால் இது உங்களைக் காப்பாற்றாது மோடி ஜி. அதானியையும் காப்பாற்றாது" என்று கூறியுள்ளார்.
கே.சி.வேணுகோபால் மேற்கோள்... - காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கேசி வேணுகோபால் கூறுகையில், "முதன்முறை பணமதிப்பிழப்பை பாஜக செய்தபோது நமது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் வார்த்தைகளை அப்படியே நினைவில் வைத்துள்ளேன். அவர் பணமதிப்பிழப்பு என்பது திட்டமிட்ட சூறையாடுதல், சட்டபூர்வமான அழிவு. அதை முழு வீச்சில் அமல்படுத்தினால் அது பிரம்மாண்டமான நிர்வாக தோல்வியாக முடியும் என்று கூறியிருந்தார். இப்போது மீண்டும் ரூ.2000 நோட்டுகளை பணமதிப்பிழப்பு செய்துள்ளனர். கடந்த 2016-ல் எடுத்த நடவடிக்கையால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டதை இப்போது சற்றும் யோசித்துப் பார்க்கவில்லை" என்று சாடியுள்ளார்.
அசாதுதீனின் ஐந்து கேள்விகள்? - ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைஸி, ரூ.2000 நோட்டுகள் பணமதிப்பிழப்பு தொடர்பாக பாஜகவுக்கு ஐந்து கேள்விகளை முன்வைத்துள்ளார். “இந்தியாவின் தலைசிறந்த பொருளாதார நிபுணர் பிரதமர் மோடி அவர்களில் உங்களிடம் கேட்க ஐந்து கேள்விகள் உள்ளன. அவை
1. ரூ.2000 நோட்டுகளை எதற்காக நீங்கள் அறிமுகம் செய்தீர்கள்?
2. அடுத்ததாக ரூ.500 நோட்டுகளையும் திரும்பப் பெறப்போகிறீர்களா?
3. 70 கோடி இந்தியர்களிடம் ஸ்மார்ட் போன்கள் இல்லை. அப்படியென்றால் இங்கே டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை செய்யப்போகிறவர்கள் யார்?
4. பில் கேட்ஸின் பெட்டர் தென் கேஷ் அலையன்ஸ் நிறுவனத்திற்கும் நீங்கள் செய்த பணமதிப்பிழப்பு 1.0 மற்றும் 2.0 நடவடிக்கைகளுக்கும் என்ன தொடர்பு?
5. NPCI சீன ஹேக்கர்களால் முடக்கப்பட்டதா?”
இவ்வாறாக பிரதமருக்கு அவர் ஐந்து கேள்விகளை எழுப்பியுள்ளார்,
காங்கிரஸ் கட்சியின் ஊடக மற்றும் விளம்பரப் பிரிவு தலைவர் பவன் கேரா கூறுகையில், “ஒரு பிரதமர் தன் அரசு அச்சடித்த நோட்டுகளை தொடர்ந்து 7 ஆண்டுகள் கூட வைத்திருக்க முடியாத சூழலில் எங்களைப் பார்த்து 70 ஆண்டுகளாக நாட்டிற்கு என்ன செய்தீர்கள் என்று கேட்கிறார்கள்” என்று கிண்டலடித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT