Published : 20 May 2023 04:29 AM
Last Updated : 20 May 2023 04:29 AM
பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் 135 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. நீண்ட இழுபறிக்குப் பின்னர் நேற்றுமுன்தினம் முதல்வராக சித்தராமையாவையும், துணை முதல்வராக டி.கே.சிவகுமாரையும் காங்கிரஸ் மேலிடம் தேர்ந்தெடுத்தது. 2024-ம் ஆண்டு நடக்கும் மக்களவைத் தேர்தல் வரை கர்நாடக காங்கிரஸ் தலைவராக டி.கே.சிவகுமார் தொடரவும் அனுமதித்தனர்.
இதையடுத்து பெங்களூரு திரும்பிய சித்தராமையாவை, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சட்டப்பேரவைக் குழு தலைவராக தேர்ந்தெடுத்தனர். அவர் ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இந்நிலையில், சித்தராமையாவும், டி.கே.சிவகுமாரும் நேற்று மீண்டும் டெல்லி சென்றனர். மல்லிகார்ஜூன கார்கேவை சந்தித்து அமைச்சரவை, துறை பங்கீடு ஆகியவை குறித்து சுமார் 2 மணி நேரம் ஆலோசனை நடத்தினர். அதில் மூத்த எம்எல்ஏக்களான பரமேஷ்வர், கே.ஹெச்.முனியப்பா, ராமலிங்க ரெட்டி, ஆர்.வி.தேஷ்பாண்டே, ஹெச்.சி.மகாதேவப்பா உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இன்று பிற்பகல் 12.30 மணிக்கு பெங்களூருவில் உள்ள கண்டீரவா ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக நடைபெறும் பதவி ஏற்பு விழாவில் சித்தராமை யாவுக்கு முதல்வராக ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைக் கிறார். டி.கே.சிவகுமாருக்கு துணை முதல்வராகவும், அமைச்சர்களுக்கும் பதவி பிரமாணமும் செய்து வைக்கிறார்.
இந்த விழாவில் சோனியா, ராகுல், பிரியங்கா காந்தி ஆகியோர் கலந்து கொள்கின்றனர். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், பிஹார் முதல்வர் நிதிஷ்குமார், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களான ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல், இமாச்சல் முதல்வர் சுக்விந்தர் சிங் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
மம்தா, மாயாவதி: அதேவேளையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகராவ் உள்ளிட் டோர் பங்கேற்கவில்லை என தெரிகிறது.
இதுதவிர பதவி ஏற்பு விழாவில் மாநிலம் முழுவதிலும் இருந்து 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட காங்கிரஸார் பங்கேற்கின்றனர். இதனால் 5 ஆயிரத்தும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT