Published : 19 May 2023 09:02 AM
Last Updated : 19 May 2023 09:02 AM
புதுடெல்லி: ரூ.970 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடம் மே 28 ஆம் தேதி திறக்கப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி இதனை திறந்துவைக்கிறார். டாடா புராஜக்ட்ஸ் நிறுவனம் புதிய நாடாளுமன்றத்தை கட்டியுள்ளது. இதற்கான வடிவமைப்பு அகமதாபாத்தின் ஹெச்சிபி டிசைன் வழங்கியது.
தற்போதுள்ள நாடாளுமன்ற கட்டிடம், 100 ஆண்டுகள் பழமையானது. எனவே, அதற்கு பதிலாக சென்டிரல் விஸ்டா என்ற பெயரில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு மத்தியஅரசு முடிவு செய்தது.
இதற்காக கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். ராஜபாதை (கடமைப்பாதை) சீரமைப்பு, பொதுவான மத்திய செயலகம், பிரதமருக்கான புதிய இல்லம் மற்றும் அலுவலகம், துணை குடியரசுத் தலைவருக்கான புதிய மாளிகை ஆகிய புதிய கட்டுமானங்களின் ஓர் அங்கமாக நாடாளுமன்றம் கட்டப்பட்டுள்ளது.
இந்திய ஜனநாயக பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் பிரம்மாண்ட அரசியல் சாசன அரங்கும் அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர கேன்டீன், வாகன பார்க்கிங் வசதிகளும் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளன.
கூடுதல் இருக்கைகள்: புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் மக்களவையில் 888 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. பழைய கட்டிடத்தில் மக்களவையில் 543 இருக்கைகளே உள்ள நிலையில் புதிய கட்டிடத்தில் இருக்கைகள் எண்ணிக்கை அதிகமாக உருவாக்கப்பட்டுள்ளன. அதேபோல் மாநிலங்களவையிலும் 250க்குப் பதிலாக 300 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்ற கூட்டுக் கூட்டங்கள் மக்களவையில் தான் நடக்கும் என்பதால் அங்கே மொத்தமாக 1,280 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.
9 ஆண்டுகள் நிறைவு: பிரதமர் நரேந்திர மோடி 9 ஆண்டுகளுக்கு முன் கடந்த 2014-ம் ஆண்டு மே 26-ம் தேதி பிரதமராக பதவியேற்றார். அதிலிருந்து 2 நாட்கள் கழித்து புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்படவுள்ளது.
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்துவைக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அழைப்புவிடுத்தார். இதனை மக்களவை செயலகம் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
இதனால் அடுத்துவரும் மழைக்கால கூட்டத்தொடர் புதிய நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறும். வரும் 2024 மே மாதம் மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பழைய நாடாளுமன்ற கட்டிடம் பாரம்பரிய சின்னமாக பராமரிக்கப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT