Published : 19 May 2023 05:39 AM
Last Updated : 19 May 2023 05:39 AM
புதுடெல்லி: அர்ஜுன்ராம் மேக்வாலுக்கு (69) முக்கியத்துவம் வாய்ந்த சட்டத்துறை அளிக்கப்பட்டதன் பின்னணியில் ராஜஸ்தான் அரசியல் உள்ளதாக தெரிகிறது.
கர்நாடகாவை அடுத்து ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இவற்றில் காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானை மீண்டும் கைப்பற்ற பாஜக தீவிரம் காட்டுகிறது. இம்மாநிலத்தில் சுமார் 16 சதவீதம் உள்ள தலித் வாக்குகளில் மேக்வால் சமூகத்தினர் சுமார் 60 சதவீதமாக உள்னர். இதனால் மேக்வால் சமூக வாக்குகள் ராஜஸ்தானில் பாஜகவிற்கு வெற்றியை தேடித்தரும் வாய்ப்புள்ளது. இதன் காரணமாகவே சட்டத்துறை அமைச்சராக இருந்த கிரண் ரிஜிஜுவுக்கு பதிலாக அப்பதவியில் அர்ஜுன்ராம் மேக்வால் அமர்த்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.
ராஜஸ்தானில் பாஜக முதல்வர் வேட்பாளருக்கு கடும் போட்டி உருவாகி உள்ளது. முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே, எதிர்க்கட்சித் தலைவர் ராஜேந்தர் ராத்தோட், மத்திய ஜல்சக்தித் துறை இணைஅமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் ஆகியோருடன் அர்ஜுன் ராமும் இப்பட்டியலில் உள்ளார். ராஜஸ்தானில் இருந்து தொடர்ந்து மூன்றாவது முறையாக அர்ஜுன்ராம் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
1982-ல் ராஜஸ்தான் மாநில நிர்வாகப் பணித் தேர்வில் வெற்றிபெற்ற இவர் பல்வேறு துறைகளில்முக்கிய அதிகாரியாக பணியாற்றினார். பிறகு ஐஏஎஸ் அந்தஸ்து இவருக்கு வழங்கப்பட்டது.
கடந்த 2009-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக விருப்ப ஓய்வு பெற்ற இவர், தனித்தொகுதியாக மாற்றப்பட்ட பிக்கானேரில் பாஜக சார்பில் போட்டியிட்டார். இவருக்கு முன்பாக பாஜக சார்பில் பாலிவுட் நடிகர் தர்மேந்திரா அத்தொகுதி எம்.பி.யாக இருந்தார். 2009 தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ரேவத் ராம் பன்வாரை சுமார் 20,000 வாக்குகள் வித்தியாசத்தில் அர்ஜுன் ராம் வென்றார்.
2010-ல் பாஜக தேசிய நிர்வாகக் குழுவிலும் இடம்பெற்ற அர்ஜுன் ராம், ராஜஸ்தான் மாநில துணைத் தலைவராகவும் அமர்த்தப்பட்டார்.
கடந்த 2013-ல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் சிறந்த எம்.பி.க்கான சன்சத் ரத்னா விருதை அர்ஜுன் ராம் பெற்றார். 2014, 2019 மக்களவை தேர்தலிலும் அர்ஜுன் ராமிற்கு அதே தொகுதியில் வெற்றி கிடைத்தது. எனவே, அர்ஜுன் ராமிற்கு முக்கியத்துவம் அளிப்பதன் மூலம், ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலில் பலன் கிடைக்கும் என பாஜக நம்புகிறது. இம்மாநிலத்தின் முதல்வர் வேட்பாளராக அர்ஜுன் ராமை முன்னிறுத்தவும் இந்த வாய்ப்பை ஒருதலித்திற்கு அளித்ததாக பெருமை கொள்ளவும் பாஜக திட்டமிடுவதாக ராஜஸ்தான் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் ஜுலை 5, 2016-ல் முதன்முறையாக மத்திய நிதித் துறை இணை அமைச்சராக அர்ஜுன்ராம் பதவியேற்றார். செப்டம்பர் 3, 2019-ல் நாடாளுமன்ற விவகாரம், ஜல்சக்தி, நதிகள் வளர்ச்சி மற்றும் கங்கை திட்ட இணை அமைச்சராக மாற்றப்பட்டார். பிரதமர் மோடியின் இரண்டாவது ஆட்சியில் அர்ஜுன்ராமிற்கு நாடாளுமன்ற விவகாரம், கனரகத்தொழில் மற்றும் பொது நிறுவனங்கள் துறை இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. பிறகு 2021-ல் மத்திய கலாச்சாரத் துறையின் பொறுப்பு அளிக்கப்பட்டது. தற்போது அவர் சட்டத் துறையின் தனிப் பொறுப்பு அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT