Published : 19 May 2023 03:48 AM
Last Updated : 19 May 2023 03:48 AM

மத்திய சட்ட அமைச்சராக அர்ஜுன் ராம் மேக்வால் நியமனம் - கிரண் ரிஜிஜு இலாகா மாற்றம்

சட்ட அமைச்சராகப் பொறுப்பேற்ற அர்ஜுன் ராம் மேக்வாலுக்கு வாழ்த்து தெரிவித்த கிரண் ரிஜிஜு (இடது). படம்: பிடிஐ

புதுடெல்லி: மத்திய சட்ட அமைச்சராக இருந்த கிரண் ரிஜிஜு மாற்றப்பட்டு, புவி அறிவியல் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக, ராஜஸ்தானை சேர்ந்த மத்திய இணையமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் சட்டத் துறையின் புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

மத்திய சட்ட அமைச்சராக இருந்த ரவிசங்கர் பிரசாத் 2021 ஜூலையில் மாற்றப்பட்டு, அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த மத்திய விளையாட்டு அமைச்சர் கிரண் ரிஜுஜு, சட்ட அமைச்சராக நியமிக்கப்பட்டார். அவரது சர்ச்சைக்குரிய கருத்துகளால், மத்திய சட்ட அமைச்சகத்துக்கும், நீதித் துறைக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

கடந்த மார்ச் மாதம் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற கிரண் ரிஜுஜு, “ஓய்வுபெற்ற நீதிபதிகள் இந்தியாவுக்கு எதிராக செயல்படுகின்றனர்" என்று குற்றம் சாட்டினார். மேலும், பதவியில் இருக்கும் நீதிபதிகள், தங்கள் பதவி உயர்வு குறித்தே அதிகம் கவலைப்படுகின்றனர் என்றும் குற்றம் சுமத்தினார். கொலிஜியம் நடைமுறையையும் அவர் தொடர்ச்சியாக விமர்சித்து வந்தார்.

இந்நிலையில், கிரண் ரிஜிஜுவிடம் இருந்து சட்ட இலாகா பறிக்கப்பட்டு, மத்திய புவி அறிவியல் துறை அமைச்சராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். ராஜஸ்தானைச் சேர்ந்த மத்திய இணையமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், சட்ட அமைச்சராக நியமிக்கப்பட்டு உள்ளார். தற்போது நாடாளுமன்ற விவகாரங்களுக்கான இணை அமைச்சராக இருக்கும் அவர், சட்ட அமைச்சகத்தின் பொறுப்பையும் கூடுதலாக கவனிக்க உள்ளார்.

மேலும் மத்திய சட்ட இணையமைச்சர் எஸ்.பி.சிங் பாகேல் மாற்றப்பட்டு, மத்திய சுகாதார இணையமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதமர் மோடியின் ஆலோசனையின் பேரில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இதற்கான உத்தரவுகளை நேற்று பிறப்பித்தார். இதையடுத்து, மத்திய சட்ட அமைச்சராக (தனிப் பொறுப்பு) அர்ஜுன் ராம் மேக்வால் உடனடியாகப் பதவியேற்றுக் கொண்டார்.

அமைச்சர் கிரண் ரிஜிஜு தனது ட்விட்டர் பதிவில், “மத்திய சட்ட அமைச்சராக பணியாற்ற வாய்ப்பு வழங்கிய பிரதமர் மோடிக்கு நன்றி. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் உள்ளிட்ட அனைத்து நீதிபதிகளுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். புதிய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வாலை வாழ்த்துகிறேன். பிரதமர் வழிகாட்டுதலின்படி, சமானிய மக்களுக்கு நீதி கிடைக்க அவர் பாடுபடுவார்" என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x