Published : 19 May 2023 03:55 AM
Last Updated : 19 May 2023 03:55 AM
புதுடெல்லி: ஒடிசா மாநிலத்தில் ரூ.8,200 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்களை நேற்று தொடங்கிவைத்த பிரதமர் மோடி, ஹவுரா-புரி இடையிலான `வந்தே பாரத்' ரயில் சேவையையும் தொடங்கிவைத்தார்.
ஒடிசா மாநிலத்தில் முதல்முறையாக ஹவுரா-புரி இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. இந்த சேவையை பிரதமர் மோடி காணொலி வாயிலாகத் தொடங்கிவைத்தார். மேலும், மொத்தம் ரூ.8,200 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்களையும் பிரதமர் தொடங்கிவைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: ஹவுரா-புரி இடையே இயக்கப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், மத, கலாச்சார மற்றும் ஆன்மிகத் தொடர்பை வலுப்படுத்தும். தற்போது நாட்டில் 15 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. அவை இணைப்பையும், பொருளாதாரத்தையும் ஊக்குவித்து வருகின்றன. ஒருகாலத்தில் புதிய தொழில்நுட்பங்கள் டெல்லி உள்ளிட்ட பெருநகரங்களுக்கு மட்டுமே கிடைத்தன. ஆனால், தற்போது இந்தியா புதிய பாதையைத் தேர்வு செய்துள்ளது. சொந்த தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகிறது. இந்த தொழில்நுட்பம் நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் சென்றடைகிறது.
சுதந்திரம் பெற்ற 75-ம் ஆண்டில் நாம் ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும். ஒற்றுமை வலுப்பெறும்போது, நாட்டின் ஒட்டுமொத்த திறனும் அதிகரிக்கும். புரி-ஹவுரா வந்தே பாரத் ரயில், இந்த வழித்தடத்தில் மிக விரைவாக செல்லும் ரயிலாகும். 500 கி.மீ. தொலைவை சுமார் ஆறரை மணி நேரத்தில் கடக்கும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
இதேபோல, புரி மற்றும் கட்டாக் ரயில் நிலையங்கள் சீரமைப்புத் திட்டம், ஒடிசாவில் ரயில் சேவையை 100 சதவீத மின்மயமாக்கும் திட்டம், சம்பல்பூர்–டிட்லாகர் இடையிலானஇரட்டை ரயில் பாதை திட்டம் உள்ளிட்ட திட்டங்களையும் பிரதமர் தொடங்கிவைத்தார்.
அருங்காட்சியக தின கண்காட்சி: சர்வதேச அருங்காட்சியக தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட கண்காட்சியையும் பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். டெல்லி பிரகதி மைதானத்தில் 2 நாட்கள் நடைபெறும் இந்தக் கண்காட்சியில் 1,200 அருங்காட்சியகங்கள் பங்கேற்றுள்ளன. மேலும், டெல்லி கடமை பாதை பாக்கெட் வரைபடத்தையும் பிரதமர் வெளியிட்டார். முன்பு ராஜபாதை என்று அழைக்கப்பட்ட இந்தப் பகுதி, தற்போது கடமை பாதை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது
ரெய்சினா ஹில் வளாகம் முதல் இந்தியா கேட் வரையிலான கடமை பாதை வழித்தடத்தில் அமைந்துள்ள அரசுக் கட்டிடங்கள், வரலாற்றுச் சிறப்புமிக்க கலாச்சார நிறுவனங்கள் குறித்த விவரங்கள் இந்த வரைபடத்தில் இடம் பெற்றுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT