Published : 18 May 2023 06:01 PM
Last Updated : 18 May 2023 06:01 PM

கர்நாடக முதல்வர் பதவி | “நான் ஏன் வருத்தப்பட வேண்டும்?” - டி.கே.சிவகுமார்

ராகுல் காந்தியுடன் டி.கே.சிவகுமார்

புதுடெல்லி: "நான் எதற்காக வருத்தப்பட வேண்டும். இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டி இருக்கிறது" என்று கர்நாடகாவின் துணை முதல்வராக அறிவிக்கப்பட்டுள்ள டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியை கைப்பற்றிய நிலையில், மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார் என்பதை தீர்மானிப்பதில் நீடித்த இழுபறிக்கு தீர்வு எட்டப்பட்டிருக்கிறது. கர்நாடக மாநில மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையாவுக்கும், மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமாருக்கும் இடையில் முதல்வர் பதவிக்காக நடந்த வெளிப்படையான போட்டியை ஐந்து நாட்களுக்கு பின்னர் கட்சித் தலைமை தீர்த்து வைத்திருக்கிறது. மாநிலத்தின் முதல்வராக சித்தராமையாவும், ஒரே துணை முதல்வராக டி.கே.சிவகுமாரும் இருப்பார்கள் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் வியாழக்கிழமை அறிவித்தார்.

மேலும், 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் முடியும் வரை சிவகுமாரே மாநில காங்கிரஸ் தலைவராக தொடருவார் என்றும், வரும் சனிக்கிழமை புதிய முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பதவி ஏற்றுக்கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அடுத்தக்கட்ட பணிகளுக்கான ஆயத்தங்கள் நடந்து வருகின்றன.

இந்தநிலையில், முதல்வர் போட்டியில் தீவிரமாக நின்றவருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டிருப்பது குறித்து டி.கே.சிவகுமாரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், "மக்கள் இவ்வளவு பெரிய ஆணையை வழங்கியிருக்கும்போது அதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். அதுதான் எங்களின் நோக்கமும் குறிக்கோளும். நான் எதற்காக வருத்தப்பட வேண்டும்? இன்னும் நீண்ட தூரம் போகவேண்டியுள்ளது. எல்லாம் நன்றாக இருக்கிறது. எல்லாம் நன்றாக இருக்கும்" என்று தெரிவித்தார்.

பனிக்கட்டி உடையத்தான் வேண்டும்: முன்னதாக, காலையில் செய்தியாளர்களிடம் பேசிய டி.கே.சிவகுமார், "காங்கிரஸ் கட்சி கர்நாடக மக்களுக்கு கடமைப்பட்டுள்ளது. மேலும், நாடு நாடாளுமன்றத் தேர்தலை எதிர்நோக்கி உள்ளது. இந்நிலையில், அனைத்திந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மற்றும் காந்தி குடும்பத்தினரின் முடிவுக்கு நான் கட்டுப்பட வேண்டிய தார்மிக பொறுப்பு உள்ளது. அதனால்நான் இந்த ஃபார்முலாவுக்கு ஒப்புக் கொண்டேன். சித்தராமையா முதல்வராக இருந்தால்தான் என்ன? பனிக்கட்டி ஒரு கட்டத்தில் உடைந்துதானே ஆக வேண்டும். அதனால் ஃபார்முலாவை ஏற்றுக் கொண்டேன். கட்சியின் உச்ச இலக்கு மக்களின் நலன். கர்நாடக மக்களின் நலனுக்கு நான் எனக்கு கொடுக்கப்பட்டதை ஏற்றுக் கொண்டேன்" என்று தெரிவித்திருந்தார்.

சகோதரர் அதிருப்தி: இதற்கிடையில், டி.கே.சிவகுமாரின் சகோதரர் டிகே சுரேஷ் கூறுகையில், "நான் இவ்விவகாரத்தில் முழுமையாக மகிழ்ச்சி கொள்ளவில்லை. ஆனால் கடமையைத் தட்டிக் கழிக்க முடியாது. அதனால், சிவகுமார் ஏற்றுக் கொண்டார். காலம் பதில் சொல்லும். டி.கே.சிவகுமாருக்கு முதல்வர் பதவி கிடைக்கும் என நினைத்தேன் ஆனால், கிடைக்கவில்லை. அதில் எனக்கு வருத்தமே" என்றார்.

தலித்துக்கு துணை முதல்வர் பதவி வேண்டும்: மாநில காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜி.பரமேஸ்வரா, "தலித் ஒருவருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படவில்லை என்றால், எதிர்மறை விளைவுகளைச் சந்திக்க வேண்டியது இருக்கும். அது கட்சிக்கு பாதிப்பை உண்டாக்கும்" என்று தெரிவித்துள்ளார். 71 வயதாகும் இந்த தலித் தலைவர், காங்கிரஸ் - மஜத கூட்டணி ஆட்சியில், குமாரசாமி முதல்வராக இருந்தபோது, துணை முதல்வராக பணியாற்றியுள்ளார். அதேபோல் மாநில காங்கிரஸ் தலைவராக 8 ஆண்டுகள் பொறுப்பு வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, வியாழக்கிழமை இரவு 7 மணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் பெங்களூருவில் நடைபெற உள்ளது. இதற்காக டெல்லியில் சென்றவர்கள் பெங்களூரு திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.

முன்னதாக, கர்நாடகாவில் உள்ள 224 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு மே 10-ம் தேதி தேர்தல் நடந்தது. அதன் வாக்குகள் 13-ம் தேதி எண்ணப்பட்டன. அதன்படி, காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மை பெற்றது. பாஜக 66 இடங்களிலும், மதசார்பற்ற ஜனதாதளம் 19 இடங்களையும் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x