Published : 18 May 2023 04:14 PM
Last Updated : 18 May 2023 04:14 PM
புது டெல்லி: ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்துக்கு மேற்கு வங்க மாநிலத்தில் விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி உத்தரவிட்டுள்ள உச்ச நீதிமன்றம், தமிழகத்தில் இந்த திரைப்படத்தை நேரடியாகவோ, மறைமுகவோ தடை செய்யக் கூடாது என்று தீர்ப்பளித்துள்ளது.
‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தில் ஒரு சமூக மக்களுக்கு எதிரான வெறுப்புணர்வு கருத்துகள் இடம்பெற்றுள்ளதாக கூறி பல மாநிலங்களில் அதனை திரையிடுவதற்கு எதிர்ப்புகள் எழுந்தன. பல அமைப்புகளின் எதிர்ப்புகளையும் மீறி மே 5-ம் தேதி நாடு முழுவதும் இத்திரைப்படம் வெளியானது. இந்த நிலையில், தமிழகம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் இந்த திரைப்படத்தை திரையிடுவதில் பல்வேறு சிக்கல் நிலவியதையடுத்து, அந்த திரைப்படத்துக்கு தடை விதிக்கப்பட்டது. அதேசமயம், உத்தர பிரதேசம், உத்தராகண்ட் போன்ற மாநிலங்கள் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்துக்கு வரி விலக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.
தமிழகம், மேற்கு வங்க மாநிலங்களில் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்துக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து அப்படத்தின் தயாரிப்பாளர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்தப் படத்துக்கு தடை விதித்தது தொடர்பாக பதிலளிக்க மேற்கு வங்க மாநிலத்திற்கு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டது. மேலும், தமிழகத்தில் திரைப்படம் வெளியான திரையரங்குகள் தாக்கப்பட்டது தொடர்பாக தமிழக அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கில் தமிழக அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்துக்கு தமிழக மக்களிடம் போதிய வரவேற்பு இல்லை. இதனால் திரையரங்க உரிமையாளர்களே படத்தை திரையரங்குகளில் திரையிடவில்லை. படம் வெளியான திரையரங்குகளிலும் அந்த படத்தை தூக்கிவிட்டு வேறு படத்தை திரையிடுகின்றனர். எனவே, இந்த விவகாரத்தில் தமிழக அரசின் தலையீடு எந்த இடத்திலும் கிடையாது என்று அதில் தெரிவித்திருந்தது. இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தீர்ப்புக்காக ஒத்திவைத்திருந்தது.
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு பிறப்பித்த தீர்ப்பில், மேற்கு வங்க மாநிலத்தில், ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தை தடை செய்வதற்கான காரணங்களாக மேற்கு வங்க அரசுத் தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ள காரணங்கள் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை. எனவே, ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தை தடை செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.
ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு குறிப்பிட்ட நபர்கள் மட்டும் தடை கோருகின்றனர் என்பதற்காக தடை விதிக்கக் கூடாது. அடிப்படை உரிமைகள் என்பதை உணர்வுப்பூர்வமனதாக பார்க்கக் கூடாது. அது ஒவ்வொருவருக்கும் மாறுபட்டதாக இருக்கும். யாருடைய அடிப்படை உரிமைகள் பறிக்கப்படுவதையும் உச்ச நீதிமன்றம் ஒருபோதும் அனுமதிக்காது. உங்களுக்கு ஒரு விஷயம் பிடிக்கவில்லை என்றால், அதை நீங்கள் செய்யாமல் இருக்கலாம். ஆனால், அடுத்தவர்களை அதை செய்யாமல் இருக்கும்படி கூறமுடியாது. எனவே, மேற்குவங்க மாநிலத்தில் இத்திரைப்படத்துக்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்வதாக நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
தமிழகத்தைப் பொறுத்துவரை ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தை நேரடியாகவோ, மறைமுகவோ தடை செய்யக் கூடாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், திரைப்படத்தை திரையிட்டுள்ள திரையரங்குகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். திரைப்படத்தை பார்க்க விரும்பும் பார்வையாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவது மாநில அரசின் கடமை என்று நீதிபதிகள் பிறப்பித்துள்ள தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த தீர்ப்பின்போது, தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்தத் திரைப்பட விவகாரத்தில் தமிழக அரசின் தலையீடு எந்த இடத்திலும் கிடையாது என்று பதிலளித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT