Published : 18 May 2023 10:54 AM
Last Updated : 18 May 2023 10:54 AM
புதுடெல்லி: கர்நாடக முதல்வர் யார் என்ற இழுபறிக்கு முடிவு வந்துவிட்டதாக காங்கிரஸ் மேலிட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, கர்நாடகா முதல்வராக சித்தராமையா, துணை முதல்வராக டிகே சிவகுமாரை நியமிக்க கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்ற நிலையில் முதல்வர் பதவி தொடர்பாக இழுபறி நீடித்துவந்தது. இந்நிலையில் கர்நாடக முதல்வராக சித்தராமையா நியமிக்கப்படுவார் என்றும் துணை முதல்வராக டிகே சிவக்குமாரும் நியமிக்கப்படுவார் என்றும் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு மாலை 7 மணியளவில் நடைபெறும் காங்கிரஸ் சட்டமன்றக் கட்சிக் கூட்டத்தில் வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனை உறுதி செய்யும்விதமாக டிகே சிவகுமார் மற்றும் அவரது சகோதரர் டிகே சுரேஷ் அளித்துள்ள பேட்டிகள் அமைந்துள்ளன.
துணை முதல்வர் பதவியை ஏற்றது ஏன்? முதல்வர் பதவிக்காக போராடிய டிகே சிவகுமார் நம்பர் 2 இடத்தில் சமரசம் அடைந்தது எப்படி என பேட்டியளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர், "காங்கிரஸ் கட்சி கர்நாடக மக்களுக்கு கடமைப்பட்டுள்ளது. மேலும், நாடு நாடாளுமன்றத் தேர்தலை எதிர்நோக்கி உள்ளது. இந்நிலையில் அனைத்திந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மற்றும் காந்தி குடும்பத்தினரின் முடிவுக்கு நான் கட்டுப்பட வேண்டிய தார்மீக பொறுப்பு உள்ளது. அதனால் நான் இந்த ஃபார்முலாவுக்கு ஒப்புக் கொண்டேன். சித்தராமையா முதல்வராக இருந்தால்தான் என்ன? பனிக்கட்டி ஒரு கட்டத்தில் உடைந்துதானே ஆக வேண்டும். அதனால் ஃபார்முலாவை ஏற்றுக் கொண்டேன். கட்சியின் உச்ச இலக்கு மக்களின் நலன். கர்நாடக மக்களின் நலனுக்கு நான் எனக்கு கொடுக்கப்பட்டதை ஏற்றுக் கொண்டேன்" என்றார்.
சகோதரர் அதிருப்தி.. இதற்கிடையில் டிகே சிவகுமாரின் சகோதரர் டிகே சுரேஷ் கூறுகையில், "நான் இவ்விவகாரத்தில் முழுமையாக மகிழ்ச்சி கொள்ளவில்லை. ஆனால் கடமையைத் தட்டிக் கழிக்க முடியாது. அதனால் சிவகுமார் ஏற்றுக் கொண்டார். காலம் பதில் சொல்லும். டிகே சிவகுமாருக்கு முதல்வர் பதவி கிடைக்கும் என நினைத்தேன் ஆனால் கிடைக்கவில்லை. அதில் எனக்கு வருத்தமே" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT