Published : 17 May 2023 02:50 PM
Last Updated : 17 May 2023 02:50 PM
பெங்களூரு: "அரசியலை விட மக்களின் விருப்பம் மிகவும் முக்கியமானது" என்று கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். முதல்வரைத் தேர்ந்தெடுப்பதில் காங்கிரஸில் நீடிக்கும் இழுபறி குறித்து அக்கட்சியை இவ்வாறு அவர் விமர்சித்துள்ளார்.
கர்நாடகாவின் முன்னாள் முதல்வரான பசவராஜ் பொம்மை புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறுகையில், "பெரும்பான்மையை பெற்றிருக்கும் நிலையில் காங்கிரஸ் கட்சி இன்னும் முதல்வர் யார் என்பதை முடிவு செய்யவில்லை. இது கட்சிக்குள் இருக்கும் உட்கட்சி நிலைமையை எடுத்துக் காட்டுகிறது. அரசியலை விட மக்களின் விருப்பம் மிகவும் முக்கியமானது. கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார் என்பதை காங்கிரஸ் விரைவில் தீர்மானிக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல் முடிவில் தென்மாநிலங்களில் ஆட்சியில் இருந்த ஒரே மாநிலத்தையும் காங்கிரஸ் கட்சியிடம் பாஜக பறிகொடுத்தது. இந்தநிலையில் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்த பசவராஜ் பொம்மை, தற்போது காபந்து முதல்வராக இருந்து வருகிறார்.
கர்நாடகாவில் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்திருக்கும் நிலையில், மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார் என்பதை தீர்மானிப்பதில் 5-வது நாளாக தொடர்ந்து இழுபறி நிலவி வருகிறது. அடுத்த முதல்வரைத் தேர்வு செய்யும் பொறுப்பு காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர் முதல்வர் போட்டியில் முன்னணியில் உள்ள சித்தராமையா, சிவகுமார் இருவரையும் தனித்தனியாக சந்தித்து செவ்வாய்க்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினார். இருந்தும் இன்னும் முடிவு எட்டப்படவில்லை.
காங்கிரஸ் கட்சி முதல்வர் பதவியை சித்தராமையாவுக்கும், துணை முதல்வர் பதவி, முக்கியமான துறைகளை சிவக்குமார், அவரது ஆதரவு எம்எல்ஏக்களுக்கும் வழங்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருந்தும் இன்னும் உடன்பாடு எட்டப்படவில்லை. இந்த நிலையில்,டெல்லியில் தங்கியுள்ள சித்தராமையா, சிவகுமார் இருவரும் காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தியை புதன்கிழமை தனித்தனியாக சந்தித்தனர்.
இதனிடையே, இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பரமேஷ்வரா செய்தியாளர்களிடம் கூறுகையில், "கர்நாடகாவின் முதல்வரைத் தேர்வு செய்வதில் எந்த சச்சரவும் இல்லை. ஒரு நடைமுறை பின்பற்றப்படுகிறது. கட்சித் தலைமை முதல்வர் பதவிக்கு நிற்பவர்களை சந்தித்து பேசுவார்த்தை நடத்துகிறது. இன்று அல்லது நாளை முடிவுகள் இறுதி செய்யப்படும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT