Published : 17 May 2023 01:28 PM
Last Updated : 17 May 2023 01:28 PM
புதுடெல்லி: கர்நாடகாவின் அடுத்த முதல்வரை தேர்ந்தெடுப்பதில் இழுபறி நீடித்துவரும் நிலையில், அதுகுறித்த பாஜகவின் விமர்சனத்திற்கு,"பழைய சம்பவங்களைத் திரும்பிப் பாருங்கள்" என்று காங்கிரஸ் கட்சி இன்று (புதன்கிழமை) பதிலடி கொடுத்துள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி.யும் அக்கட்சியின் பொதுச் செயலாளருமான ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில்," குறிப்பாக பிரதமரின் முரசறைபவர்களின் ஞாபகத்திற்காக இது. 2017-ம் ஆண்டு உத்தரப் பிரதேச சட்டப்பேரவை முடிவுகள் வெளியானது மார்ச் 11-ம் தேதி. யோகி ஆதித்யநாத் 8 நாட்கள் கழித்து மார்ச் 19-ம் தேதிதான் முதல்வராக நியமிக்கப்பட்டார்.
2021-ம் ஆண்டு அஸ்ஸாம் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியானது மே 3-ம் தேதி, ஹிமந்த பிஸ்வா சர்மா 7 நாட்கள் கழித்து மே 10-ம் தேதி தான் முதல்வராக நியமிக்கப்பட்டார். இதுபோல இன்னும் நிறைய உதாரணங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம்" என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கர்நாடகா தேர்தல் முடிவுகள் கடந்த சனிக்கிழமை (மே 13) அறிவிக்கப்பட்டு காங்கிரஸ் கட்சி தனிப்பொரும்பான்மை பெற்றும், அங்கு அடுத்த முதல்வரை தீர்மானிப்பதில் இழுபறி நிலவி வருகிறது. முதல்வர் பதவிக்கு சித்தராமையா, டிகே சிவகுமார் இருவரிடையே வெளிப்படையாக கடுமையான போட்டி நிலவி வருகிறது.
இதுகுறித்து பல பாஜக தலைவர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். அக்கட்சியின் ஐடி பிரிவு தலைவர் அமித் மாளவியா இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில்,"காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தன்னை ஒரு தபால்காரராக கருதும் நிலை அக்கட்சியில் நிலவி வருகிறது. நீங்கள் சர்க்கஸ் பார்க்க வேண்டுமா? காங்கிரஸ் கட்சி அவர்களின் கர்நாடகா முதல்வரைத் தேர்ந்தெடுப்பதை பாருங்கள்" என்று தெரிவித்திருந்தார்.
மேலும் "இப்படிபட்டச் சூழ்நிலையில், தலைவர்கள் ஒருவரையொருவர் தாக்கிக்கொள்வது, தனக்கான ஆதரவினைத் திரட்டுவது, ஊடகங்களின் வாயிலாக கட்சிக்கு மிரட்டல் விடுவது போன்றவைகளை பாஜகவில் ஒருபோதும் பார்க்க முடியாது" என்று தெரிவித்திருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT