Published : 17 May 2023 12:21 PM
Last Updated : 17 May 2023 12:21 PM

கர்நாடகா முதல்வர் பதவி இழுபறி | இன்று ராகுலை சந்திக்கும் சித்தராமையா, சிவகுமார்

சித்தராமையா, சிவகுமார் | கோப்புப்படம்

புதுடெல்லி: கர்நாடகவின் அடுத்த முதல்வர் யார் என்ற இழுபறி மூன்று நாளாக தொடர்ந்து வரும் நிலையில், அம்மாநில முன்னாள் முதல்வர் சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார் இன்று (புதன்கிழமை) ராகுல் காந்தியை சந்திக்கின்றனர்.

கர்நாடகாவின் 224 தொகுதிகளுக்கு மே 10ம் தேதி நடந்த தேர்தலில் 135 இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி தலைதூக்கத் தொடங்கியது. முன்னாள் முதல்வர் சித்தராமையா, மாநில தலைவர் டி.கே.சிவகுமார், முன்னாள் துணை முதல்வர் பரமேஷ்வர், முன்னாள் அமைச்சர் எம்.பி.பாட்டீல் இடையே முதல்வர் பதவிக்கான போட்டி நிலவுகிறது. சித்தராமையாவுக்கும், டி.கே.சிவகுமாருக்கும் இடையே வெளிப்படையாகவே போட்டி வெடித்துள்ளது.

இந்தநிலையில், மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார் என்பதைத் தீர்மானிக்க ஞாயிற்றுக்கிழமை நடந்த காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் அந்த பொறுப்பு கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் ஒப்படைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து திங்கள்கிழமை சித்தராமையா டெல்லி புறப்பட்டுச் சென்றார். உடல் உபாதை காரணமாக டெல்லி பயணத்தை ரத்து செய்திருந்த மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி கே சிவகுமார் செவ்வாய்க்கிழமை டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

இந்தநிலையில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, செவ்வாய்க்கிழமை ராகுல் காந்தி, காங்கிரஸ் மத்திய பார்வையாளர்கள், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள் மற்றும் சித்தராமையா, சிவகுமாரைத் தனித்தனியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தநிலையில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் ராகுல் காந்தியை சித்தராமையாவும், டிகே சிவகுமார் இருவரும் இன்று (புதன் கிழமை) சந்திக்க இருக்கின்றனர்.

மல்லிகார்ஜுன கார்கே செவ்வாய்க்கிழமை ராகுல் காந்தியை சந்தித்துப் பேசியபோது, ‘‘நீங்கள் (கார்கே) கர்நாடகாவை சேர்ந்த மூத்த தலைவர் என்பதால் அம்மாநில அரசியல் நன்றாகத் தெரியும். எனவே முதல்வர் விவகாரத்தில் நீங்கள் தன்னிச்சையாக முடிவெடுங்கள். எஸ்சி, எஸ்டி, ஓபிசி, சிறுபான்மையினர், ஏழைகள் வாக்களித்ததாலே காங்கிரஸ் வெற்றி பெற்றது. அவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவத்தை அளிக்க வேண்டும்'' என ராகுல் காந்தி வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

இதனிடையே, நேற்று டெல்லி சென்ற டி.கே.சிவகுமார், கார்கேவின் இல்லத்தில் அவரை சந்தித்து சுமார் 45 நிமிடங்கள் பேசினார். அப்போது, 'சித்தராமையாவை ஏன் முதல்வராக்க கூடாது. தனக்கு ஏன் வாய்ப்பு வழங்க வேண்டும்' என்பதனை விவரிக்கும் வகையில் 25 அம்சங்கள் அடங்கிய கடிதத்தை வழங்கினார். இதைத் தொடர்ந்து மாலையில் கார்கேவை, சித்தராமையா சந்தித்துப் பேசினார். அப்போது தனக்கு ஆதரவாக இருக்கும் 90 எம்எல்ஏக்களின் பட்டியலை வழங்கினார்.

நல்ல முடிவு விரைவில் எடுக்கப்படும்: இதற்கிடையில், கட்சித்தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்திக்க வந்த காங்கிரஸ் செயலாளர் கேசி வேணுகோபால், "நல்ல முடிவு விரைவில் வரும், காத்திருங்கள்" என்று தெரிவித்தார். இருப்பினும் டெல்லி வட்டாரங்கள் முதல்வர் யார் என்ற அறிவிப்பு வெளியாக இன்னும் இரண்டு, மூன்று நாட்கள் ஆகலாம் என்று தெரிவிக்கின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x