Last Updated : 27 Oct, 2017 01:55 PM

 

Published : 27 Oct 2017 01:55 PM
Last Updated : 27 Oct 2017 01:55 PM

பொதுத்துறை வங்கிகளில் ரூ.2.11 லட்சம் கோடி முதலீடு அறிவிப்பு- தேர்தல் உத்தியா? பொருளாதார சீர்திருத்தமா?

அடுத்த இரு ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ. 2.11 லட்சம் கோடி அளவுக்கு முதலீடு செய்யப்படும் என அண்மையில் மத்திய நிதி அமைச்சர் தெரிவித்தார்.

ஆனால், நாட்டின் மோசமான பொருளாதார சூழலை மறைக்கவும் பணமதிப்பு நீக்க நடவடிக்கை மற்றும் ஜிஎஸ்டி வரியால் ஏற்பட்ட பாதிப்புகளை மறைக்கவும் இதுபோன்ற முயற்சியில் மத்திய அரசு ஈடுபடுவதாக எதிர்கட்சிகள் கூறுகின்றன.

இதுதொடர்பாக 'தி இந்து' தமிழ் இணையதளத்துக்காக பொருளாதார நிபுணர்கள் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டுள்ளனர்.

பழைய 500- 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த ஆண்டு நவம்பர் 8ம் தேதி அறிவிக்கப்பட்டது. ஏறக்குறைய ஒராண்டு முடியும் நிலையில், அதனால், சாதாரண மக்கள் முதல் வங்கிகள் வரை சந்தித்த பாதிப்புகள் அதிகம்.

பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பின் வங்கிகளுக்கு முழுமையாக பணம் திரும்பி வந்து விட்டது. நாட்டின் பணப்புழக்கம் 90 சதவீதம் சரியாகி விட்டதாக மத்திய அரசு தெரிவிக்கிறது. நிலைமை பெருமளவு சீரடைந்து விட்டதாக மத்திய அரசும், நிதியமைச்சகமும் மாறி மாறி தெரிவிக்கின்றன.

இந்த சூழலில், வங்கிகளுக்கு, 2.11 லட்சம் கோடி ரூபாயை அளிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. வங்கிகளுக்கு ஏன் இந்த நெருக்கடி ஏற்பட்டது?

வங்கிகளில் வாராக்கடன் அதிகரிப்பதால் அவற்றிக்கு நிதி தேவை ஏற்படுவதாக மத்திய அரசு கூறுகிறது. பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் அளவு 10 லட்சம் கோடி ரூபாயாக உள்ளதாக கூறப்படுகிறது.

இவ்வளவு பெரிய கடன் தொகை, இந்திய பொருளாதாரத்திற்கு சவாலான ஒன்று தான். இந்த நிலை தொடர்ந்தால் வங்கிகளுக்கும் சிக்கல் தான். வங்கிகளுக்கு மத்திய அரசு அளிக்கும் 2.11 லட்சம் கோடி ரூபாயில், 1.35 லட்சம் கோடி ரூபாயை பத்திரங்கள் மூலம் திரட்டப் போவதாகவும் நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறி இருக்கிறார். ஆனால் எவ்வாறு பத்திரங்கள் மூலம் நிதி திரட்டப்படும், அதற்கான திட்டம் என்ன? வட்டி எவ்வளவு? உட்பட விவரங்களை அவர் அறிவிக்க வில்லை.

இப்படி ஆழமான தகவல்கள் இல்லாத இந்த அறிவிப்பு குஜராத் தேர்தலை மனதிற் கொண்டு அறிவிக்கப்பட்டதாக எதிர்கட்சிகள் விமர்சிக்கின்றன.

நாட்டின் மோசமான பொருளாதார சூழலை மறைக்கவும், பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜிஎஸ்டி வரியால் ஏற்பட்ட பாதிப்புகளை மறைக்க இதுபோன்ற முயற்சியில் மத்திய அரசு ஈடுபடுவதாகவும் எதிர்கட்சிகள் கூறுகின்றன.

இதுபற்றி பொருளாதார நிபுணர்பேராசிரியர் வெங்கடேஷ் பி.ஆத்ரேயா கூறியதாவது:

வங்கிகளுக்கு 2.11 லட்சம் கோடி ரூபாய் நிதி அளிப்பதாக மத்திய அரசு அறிவித்து இருப்பது கண்துடைப்பு நாடகம். ஏற்கனவே, 2015ல் அறிவித்த திட்டத்தின் கீழ் தான் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அதுவும் மத்திய அரசின் பங்களிப்பு ரூ.18.000 கோடி மட்டுமே. மீதமுள்ள தொகையை, வங்கிகள் வெளியிடும் பத்திரங்கள் மூலமாகவும், வங்கி பங்குகளை விற்பனை செய்வதன் மூலமாகவும் நிதி திரட்ட போவதாக கூறியுள்ளனர். பொதுத்றை வங்கிகளை தனியார் மயமாக்கும் முயற்சியே இது.

வாராக்கடன் அதிகரித்துள்ளதாக கூறும் அரசு, பொதுத்துறை வங்கிகளிடம் இருந்து பெருந்தொகையை கடனாகப் பெற்றுக் கொண்டு அதை திருப்பி செலுத்தாதவர்களிடம் வசூலிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதற்கு பதிலாக வங்கிளுக்கு நிதியளிப்பதாக கூறி மறைமுகமாக பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் முயற்சி நடக்கிறது. வங்கிக்கு ஏற்படும் இழப்பை, அதில் டெபாசிட் செய்துள்ளவர்களும் ஏற்க வேண்டும் எனக் கூறுவது தவறானது.

வங்கிகளுக்கு கூடுதல் நிதி அளிப்பதால் அந்த வங்கிகள் புதிய கடன்களை கொடுக்கப்போவதும் இல்லை. மத்திய அரசின் நடவடிக்கைகளால் பொருளாதாரம் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. பண மதிப்பு நீக்க நடவடிக்கை, மாடுகளை சந்தையில் விற்க தடை, ஜிஎஸ்டி வரி ஆகிய மூன்று நடவடிக்கையால், விவசாயிகளும், சிறு மற்றும் குறு வர்த்தகர்கள் பாதிக்கப்பட்டுள்ளன்ர. அடித்தட்டு மக்கள் மிக மோசமான பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். இதனால் மத்திய அரசின் மீது கடுமையான விமர்சனங்கள் எழுகின்றன. இதை மறைக்கவே பொருளாதார சீர்திருத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தோற்றத்தை ஏற்படுத்த மத்திய அரசு முயல்கிறது. குஜராத் தேர்தல் நடைபெறும் இந்த நேரத்தில் மக்களின் அதிருப்தியை திசை திருப்பும் நடவடிக்கை இது.

இவ்வாறு அவர் கூறினார்.

மத்திய அரசின் வங்கிகளுக்கு நிதியளிக்கும் திட்டம் குறித்து பொருளாதார நிபுணர் எம்.ஆர். வெங்கடேடஷ் கூறியதாவது:

இந்திய வங்கிகளுக்கு 3 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு முதலீடு தேவைப்படுவதாக சர்வதேச கணக்கீடுகள் கூறுவதன் அடிப்படையில், மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. அதன்படி. 2.11 லட்சம் கோடி ரூபாய் வங்கிகளுக்கு நிதி அளிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது வரவேற்கத்தக்க நடவடிக்கை தான்.

ஆனால் இதை மத்திய அரசு எவ்வாறு செய்யப்போகிறது என்பது முக்கியம். இந்த நடவடிக்கையால் மத்திய அரசுக்கு ஏற்படும் பற்றாக்குறையை எப்படி சமாளிக்க போகிறது என்ற கேள்வி எழுகிறது.

அரசுப் பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் நிதி திரட்டுவது என்பது சாதாரண விஷயமல்ல. எதிர்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பதால் உடனடியாக அதை செய்ய முடியாது. இதற்கான பலனை எட்ட ஐந்து ஆண்டுகள் கூட ஆகலாம்.

அதுபோலவே, பத்திரங்கள் மூலம் நிதி திரட்டுவதிலும், சில சிக்கல்கள் உள்ளன. பத்திரங்கள் மூலம் திரட்டப்படும் நிதிக்கு மக்களிடம் இருந்து பெறப்படும் குறைந்தபட்சம் 7.5 சதவீதம் வட்டி கொடுத்தாக வேண்டும்.

ஆனால், அரசுக்கு கிடைக்கும் லாபம் அந்த அளவிற்கு இருக்காது. இதனால் ஏற்படும் நிதி இழப்பை அரசு எவ்வாறு சரி கட்டும் என்ற கேள்வியும் உள்ளது. இது மத்திய அரசுக்கு சவாலான ஒன்று தான். அந்த சவாலை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x