Published : 16 May 2023 02:10 PM
Last Updated : 16 May 2023 02:10 PM
புதுடெல்லி: "ஆட்சேர்ப்பு முறையில் பாஜக அரசு ஏற்படுத்தியுள்ள மாற்றங்களால் ஊழல் மற்றும் பாரபட்சத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது" என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பிதமர் மோடி இன்று (செவ்வாய்க்கிழமை) நடந்த ‘ரோஜ்கார் மேளா'-வில் மத்திய அரசு பணிகளுக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 71,000 பேருக்கு பணிநியமன ஆணைகள் வழங்கும் விழாவில் காணொலி வாயிலாக கலந்து கொண்டார். விழாவில் பேசிய பிரதமர் கூறியதாவது, "முன்பெல்லாம் அரசு வேலைக்கு விண்ணப்பிப்பது கடினமானதாக இருந்தது. விண்ணப்பபடிவத்தைப் பெற மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டும். தற்போது அரசு வேலைக்கு விண்ணப்பிப்பது முதல் அதற்கான முடிவுகளை அறிவிப்பது வரை அனைத்து செயல்பாடுகளும் ஆன்லைன் முறையில் கொண்டு வரப்பட்டுள்ளது. குரூப் சி மற்றும் குரூப் டி பதவிகளுக்கு நேர்காணல்கள் நீக்கப்பட்டுள்ளது. கடந்த 9 ஆண்டுகால பாஜக ஆட்சியில் ஆட்சேர்ப்பு முறையில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்களால் ஊழல், பாரபட்சம் போன்றவைகள் தடுக்கப்பட்டுள்ளன.
சில நாட்களுக்கு முன்பு நான் வால்மார்ட்-இன் தலைமை செயல் அதிகாரியை சந்தித்தேன். அடுத்த 3 முதல் 4 ஆண்டுகளில் அவர்களுடைய நிறுவனம் ரூ.80,000 கோடிக்கு ஏற்றுமதியில் ஈடுபட இருப்பதாக என்னிடம் தெரிவித்தார். இது லாஜிஸ்டிக்ஸ் மற்றும் பொருள் விநியோக துறையில் ஈடுபாடு கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு மிகப்பெரிய செய்தி. சிஸ்கோ சிஇஒவும், ரூ.8,000 கோடிக்கு மேட் இன் இந்தியா பொருள்களை ஏற்றுமதி திட்டம் குறித்தும் என்னிடம் தெரிவித்தார். அடுத்த வாரத்தில் மேலும் சில பெரிய நிறுவனங்களின் சிஇஓகளை சந்திக்க இருக்கிறேன். அவர்கள் எல்லோரும் இந்தியாவில் முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளனர்.
எஃப்டிஐ (FDI) மற்றும் ஏற்றுமதி சாதனைகள் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகின்றன. வளர்ந்து வரும் துறைக்கு இந்த அரசு தொடர்ந்து அளித்து வரும் ஆதரவினால் வேலைவாய்ப்பின் தன்மைகளும் மாறி வருகின்றன. ஸ்டார்ட் அப் துறைகளில் நாடு மிகப்பெரிய புரட்சியை சந்தித்துள்ளது. பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக 2014 வரை சில நூறு ஸ்டார்ட் அப் நிறுவனங்களே இருந்தன. தற்போது அவற்றின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கியுள்ளது. அவைகளால் 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
பாஜக அரசு ஆட்சிக்கு வரும்போது நாட்டின் ஊரகப்பகுதிகளில் 4 லட்சம் கி.மீ. தூரத்திற்கே சாலை வசதிகள் இருந்தன. தற்போது அவை 7.25 லட்சம் கி மீ. தூரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 2014க்கு முன்பாக நாட்டில் 74 விமான நிலையங்களே இருந்தன. தற்போது அவை 150 ஆக உயர்ந்துள்ளது.
ஏழைகளுக்கான அரசின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ், 4 கோடிக்கும் அதிகமான புக்கா வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் பல்வேறு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதேபோல், 2014க்கு முன்பாக இருந்த 720 பல்கலைக்கழகங்கள் தற்போது 1,100 ஆகவும், மருத்துவக்கல்லூரிகள் 400-லிருந்து 700 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன" இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.
Rozgar Mela is our endeavour to empower the youth and strengthen their participation in national development. https://t.co/nzn9JTwhWk
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...