Published : 28 Oct 2017 11:18 AM
Last Updated : 28 Oct 2017 11:18 AM
பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்தும், காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தியை புகழ்ந்தும், கூட்டணி கட்சியான சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ரவுத் பேசிய விவகாரம் பாஜக தலைவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், அக்கூட்டணியில் விரிசல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள சிவசேனா சமீபகாலமாக மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வருகிறது. அக்கட்சி பத்திரிக்கையான சாம்னாவில் பாஜகவையும், பிரதமர் நரேந்திர மோடியையும் விமர்சித்து கட்டுரைகள் வெளிவருகின்றன.
இந்நிலையில், சிவசேனாவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், எம்பியுமான சஞ்சய் ரவுத் பிரதமர் மோடியை விமர்சித்து தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். ‘‘நாடுமுழுவதும் வீசிய மோடி அலை தற்போது மங்கிவிட்டது. காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி நாட்டை வழிநடத்த ராகுல் காந்தி தயாராகி விட்டார்'' என கூறினார்.
இந்த விவகாரம் மஹாராஷ்டிர மாநிலத்தில் பாஜக - சிவசேனா கூட்டணியில் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. மஹாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
''கூட்டணி அரசில் இடம்பெற்றுள்ள சிவசேனா தனது கருத்துகளை சொல்ல உரிமை உள்ளது. அதற்காக எதிர்கட்சிகளை போல தொடர்ந்து விமர்சனம் செய்து வருவதை ஏற்க முடியாது. கூட்டணியில் தொடருவதா? அல்லது வெளியேறுவதா? என்பதை அக்கட்சி முடிவு செய்ய வேண்டும்'' என தேவேந்திர பட்னவிஸ் கூறியுள்ளார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அரசியல் பார்வையாளர்கள், ''பாஜக - சிவசேனா இடையே கொள்கை ரீதியான மோதல் எதுவும் இல்லை. ஈகோ மோதல் மட்டுமே. பாஜகவின் திட்டங்களில் சிவசேனாவுக்கு உடன்பாடு இல்லை என்றால் பிறகு ஏன்? மத்தியிலும், மாநிலத்திலும் அக்கட்சி கூட்டணியில் இடம் பெற்றுள்ளது'' என கேள்வி எழுப்புகின்றனர்.
சஞ்சய் ரவுத்தின் பேச்சுக்கு, மஹாராஷ்டிர மாநில அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான வினோத் தாவ்டேயும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT