Published : 15 May 2023 06:56 PM
Last Updated : 15 May 2023 06:56 PM

“இந்துத்துவா என்பது தர்மம் அல்ல; குண்டர்களின் கூட்டம்தான் பஜ்ரங் தளம்” - திக்விஜய சிங் விமர்சனம்

ஜபல்பூர்: இந்துத்துவா என்பது தர்மம் அல்ல என்றும், சனாதனம்தான் தர்மம் என்றும் தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய சிங், குண்டர்களின் கூட்டம்தான் பஜ்ரங் தளம் என விமர்சித்துள்ளார்.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அறுதிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ள நிலையில், மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான திக்விஜய சிங் ஜபல்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “சனாதனம்தான் நமது தர்மம். இந்துத்துவத்தை நாங்கள் தர்மமாகக் கருதுவதில்லை. ஏற்காதவனை தடியால் அடி; அவர்களது வீட்டை இடித்துத் தள்ளு; பணத்தை கொள்ளையடி இதுதான் இந்துத்துவா.

பஜ்ரங் தளம் அமைப்பை ஆஞ்சநேயரோடு பிரதமர் மோடி ஒப்பிட்டது வலியை ஏற்படுத்தியது. இந்த குண்டர் கூட்டம்தான் ஜபல்பூரில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தை தாக்கி நாசப்படுத்தியது. ஆஞ்சநேயரை பஜ்ரங் தளம் என்று முழங்குவது ஆஞ்சநேயரை அவமதிப்பது. இதற்காக அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும். கர்நாடகாவில் பஜ்ரங் தளம் அமைப்பு தடை செய்யப்படும் என காங்கிரஸ் அளித்துள்ள வாக்குறுதியைப் பொறுத்தவரை, வெறுப்பை பரப்புவர்களுக்கு எதிராக அவர்கள் எந்த மதத்தவர்களாக இருந்தாலும், அமைப்பாக இருந்தாலும் அவர்கள் மீது வழக்குப் பதிய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. நாங்கள் அதனை பின்பற்றுவோம்” என்று திக்விஜய சிங் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x