Published : 15 May 2023 05:43 PM
Last Updated : 15 May 2023 05:43 PM
ஜெய்ப்பூர்: தனது கோரிக்கைகள் இம்மாத இறுதிக்குள் ஏற்கப்படாவிட்டால் மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாக சச்சின் பைலட் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் முன்னாள் துணை முதல்வரும், காங்கிரஸ் எம்எல்ஏவுமான சச்சின் பைலட், மாநில காங்கிரஸ் அரசுக்கு எதிராக கடந்த 5 நாட்களாக மேற்கொண்ட நடைபயணம் இன்று நிறைவடைந்தது. ராஜஸ்தானின் அஜ்மீரில் கடந்த வியாழக்கிழமை நடைபயணத்தைத் தொடங்கிய அவர், தலைநகர் ஜெய்ப்பூரில் இன்று நிறைவு செய்தார். இந்த 5 நாள் நடைபயணத்தின்போது தினமும் 25 கிலோ மீட்டர் தூரம் அவர் நடந்து சென்றார். அவரோடு ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் கலந்து கொண்டு நடைபயணம் மேற்கொண்டனர்.
"ராஜஸ்தான் அரசு தேர்வாணையத்தை கலைக்க வேண்டும், அதனை மறுசீரமைக்க வேண்டும், அரசுப் பணி தேர்வுத் தாள் கசிவு வழக்குகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், முந்தைய பாஜக அரசுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து உயர்மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும்" ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி சச்சின் பைலட் இந்த நடைபயணத்தை மேற்கொண்டார்.
நடைபயணத்தின் இறுதி நாளான இன்று (திங்கள்கிழமை) செய்தியாளர்களிடம் பேசிய சச்சின் பைலட், "எனது கோரிக்கைகள் இம்மாத இறுதிக்குள் ஏற்கப்படாவிட்டால், மாநிலம் தழுவிய மாபெரும் போராட்டம் நடத்தப்படும். எனது இறுதி மூச்சு உள்ளவரை நான் மக்களுக்காக பணியாற்றுவேன். யாரும் என்னை அச்சுறுத்த முடியாது" என தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் காங்கிரசில் முதல்வர் அஷோக் கெலாட்டுக்கும் சச்சின் பைலட்டுக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வரும் நிலையில், மாநில அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் நோக்கிலேயே அவரது இந்த நடைபயணம் இருந்தது என்பதால், இந்த நடைபயணத்தை முதல்வர் கெலாட் கடுமையாக விமர்சித்துள்ளார். "ஒருவர் தன்னோடு அனைவரையும் அரவணைத்துச் சென்றால் மட்டுமே வெற்றி பெற முடியும். கோஷ்டி அரசியல் செய்யும் நோக்கில் ஒருவர் தனித்து செயல்பட்டால் அவரால் வெற்றி பெற முடியாது. கோஷ்டி அரசியல் செய்த பலரை நான் அறிவேன். அவர்கள் அரசியலில் வெற்றி பெற்றதில்லை" என அஷோக் கெலாட் விமர்சித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT