Published : 15 May 2023 04:52 PM
Last Updated : 15 May 2023 04:52 PM

கர்நாடகாவில் ‘முஸ்லிம் துணை முதல்வர்’ கோரிக்கைக்கு பின்னால் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

கர்நாடகா வக்ஃப் வாரியத் தலைவர் ஷஃபி சதி

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் முஸ்லிம் ஒருவருக்கு துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் என்று அம்மாநில வக்ஃப் வாரியத்தின் தலைவர் ஷஃபி சதி தெரிவித்துள்ளார். அவரது இந்தக் கோரிக்கைக்கு பின்னால் பாஜக இருப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இதன் மூலம் தென்மாநிலத்தில் பாஜக ஆட்சியில் இருந்த ஒரே மாநிலம் அக்கட்சியை விட்டு கைநழுவிப்போய் உள்ளது. இந்த நிலையில், மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார் என்ற போட்டி முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கும், மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவகுமாருக்கும் இடையில் நிலவி வருகிறது. அந்தப் பிரச்சினைக்கு காங்கிரஸ் கட்சித் தலைமை தீர்வு காண முயற்சித்து வரும் நிலையில், புதிய கோரிக்கை ஒன்றை கர்நாடகா மாநில வக்ஃப் வாரியத்தின் தலைவர் ஷஃபி சதி வைத்துள்ளார். அவர் கர்நாடாகாவில் முஸ்லிம் ஒருவரைத் துணைமுதல்வராக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கு பதில் அளித்துள்ள காங்கிரஸ் கட்சி, ‘ஷஃபி சதி பின்னால் பாஜக இருக்கிறது. கர்நாடகாவின் ஆட்சியை பாஜகவிடமிருந்து காங்கிரஸ் கைப்பற்றியிருப்பதால் காங்கிரஸை தாக்க பாஜக இந்தப் பிரச்சினையை கிளப்பிவிட்டுள்ளது’ என்று என்று தெரிவித்துள்ளது.

பாஜகவின் அமித் மாளவியா, வக்ஃப் வாரியத் தலைவரின் வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, “காங்கிரஸ் கட்சியின் மதச்சார்பின்மை ஒரு விலையுடன் வந்துள்ளது" என்று தெரிவித்துள்ளார். அவர் பகிர்ந்துள்ள வீடியோவில் பேசியுள்ள வக்ஃப் வாரியத் தலைவர், "தேர்தலுக்கு முன்பே நாங்கள், துணை முதல்வராக ஒரு முஸ்லிம் இருக்க வேண்டும், எங்களுக்கு 30 இடங்கள் வேண்டும் என்று தெரிவித்திருந்தோம். 15 இடங்கள் எங்களுக்கு வழங்கப்பட்டது. 9 முஸ்லிம் வேட்பாளர்கள் வென்றுள்ளனர். 67 -72 சட்டப்பேரவைத் தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி முஸ்லிம்களாலேயே வெற்றி பெற்றுள்ளது.

காங்கிரஸ் கட்சிக்கு நாங்கள் நிறையக் கொடுத்துள்ளோம். நாங்கள் சிலவற்றை பெறுவதற்கான நேரம் இது. ஒரு முஸ்லிம் துணை முதல்வராக வேண்டும். உள்துறை, வருவாய், கல்வி போன்ற நல்ல துறைகளுடன் 5 அமைச்சர் பதவிகள் வேண்டும். கர்நாடகாவில் இதுவரை முஸ்லிம் ஒருவர் முதல்வராக இருந்தில்லை, ஆனாலும் நாங்கள் அதனைக் கேட்கவில்லை" என்று ஷஃபி தெரிவித்துள்ளார்.

அமித் மாளவியாவின் இந்தப் பகிர்வுக்கு பதிலடி கொடுத்துள்ள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பவன்கெரா, "உங்களுடைய போலி தேவைகளை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. என்றாலும் இது கொஞ்சம் அதிகம். ஷஃபி சதி பின்னால் பாஜக இருக்கிறது" என்று குற்றம்சாட்டியுள்ளார்.

மற்றொரு பாஜக செய்தித் தொடர்பாளரான ஷெஹ்சாத் பூனாவாலா தனது ட்விட்டர் பக்கத்தில், "டி.கே.சிவகுமார், சித்தராமையா, பாட்டீல், பரமேஷ்வரா சிக்கலைத் தொடர்ந்து, தற்போது முதன்மையான முஸ்லிம் குழு ஒன்று கர்நாடகாவில் தங்களின் பங்கினைக் கோருகிறது. துணை முதல்வர் மற்றும் 5 அமைச்சர்கள் பதவியைக் கோருகிறது. காங்கிரஸின் திருப்திப்படுத்தும் அரசியலான மத அடிப்படையிலான இடஒதுக்கீடு, பசுவதை தடுப்புச் சட்டம் ரத்து, மதமாற்ற தடைச் சட்டத்துக்கு எதிர்ப்பு மற்றும் எஸ்டிபிஐ உடன் கூட்டணி போன்றை இப்போது அக்கட்சியைத் துரத்த தொடங்கியுள்ளது. நிச்சமயமற்ற, அரசியல் அநாகரிகம் நிறைந்த தனது ராஜஸ்தான் மாதிரியைப் போல கர்நாடகாவிலும் ஸ்திரத்தன்மை இல்லாத ஊழல் நிறைந்த ஆட்சியை கர்நாடகாவில் காங்கிரஸ் வழங்கினாலும் ஆச்சரியப்படுதற்கு இல்லை" என்று தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார் என்பதை தேர்ந்தெடுக்கும் பொறுப்பை கட்சியின் தேசிய தலைவர் கார்கேவிடம் ஒப்படைத்த அடுத்த நாளில் வக்ஃப் வாரியத் தலைவரின் துணை முதல்வர் கோரிக்கை வந்துள்ளது. ஏற்கெனவே சிவகுமாருக்கும், சித்தராமையாவுக்கும் இடையில் கடும் போட்டி நடந்து வரும் நிலையில், ராஜஸ்தானைப் போல போட்டியில் இருக்கும் இருவருக்கும் முதல்வர், துணை முதல்வர் பதவியைத் தர தலைமை முடிவு செய்யலாம். தற்போது வக்ஃப் வாரியத்தின் கோரிக்கை, அந்த முடிவுக்கும் சிக்கல் ஏற்படுத்தலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x