Last Updated : 15 May, 2023 03:54 AM

2  

Published : 15 May 2023 03:54 AM
Last Updated : 15 May 2023 03:54 AM

கர்நாடகா அமைச்சரவை மே 18-ல் பதவியேற்பு - மல்லிகார்ஜுன கார்கேவிடம் முதல்வரை தேர்ந்தெடுக்கும் அதிகாரம்

கர்நாடக முதல்வரை தேர்வு செய்வது தொடர்பாக பெங்களூருவில் நேற்று நடந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்ற மூத்த தலைவர் சித்தராமையா, மாநிலத் தலைவர் டி.கே.சிவகுமார் உள்ளிட்டோர்.

பெங்களூரு: கர்நாடகாவில் முதல்வர் பதவியை கைப்பற்ற சித்தராமையாவுக்கும், டி.கே.சிவகுமாருக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. புதிய முதல்வரை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு வழங்கப்பட்டுள்ளது. புதிய அமைச்சரவை வரும் 18-ம் தேதி பதவியேற்கும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கர்நாடகாவில் மே 10-ம் தேதி நடந்த சட்டப்பேரவை தேர்தலில் மொத்தம் உள்ள 224 இடங்களில் 135 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றி, அமோக வெற்றி பெற்றது. பாஜக 66, மஜத 19, சுயேச்சைகள் 4 இடங்களையும் பிடித்தன. பாஜக தோல்வி அடைந்ததால் முதல்வர் பதவியை பசவராஜ் பொம்மை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில், தேர்தலில் வென்ற காங்கிரஸ் முன்னாள் முதல்வர் சித்தராமையா, மாநில தலைவர் டி.கே.சிவகுமார், முன்னாள் துணை முதல்வர் பரமேஷ்வர், முன்னாள் அமைச்சர் எம்.பி.பாட்டீல் ஆகியோர் முதல்வர் பதவியை கைப்பற்றும் முயற்சியில் இறங்கினர். காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை முதல்வராக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது.

இந்நிலையில் சித்தராமையாவுக்கும் டி.கே.சிவகுமாருக்கும் ஏற்பட்ட போட்டி வெளிப்படையாகவே வெடித்தது. சிவகுமாரின் ஆதரவாளர்கள் பெங்களூருவில் முக்கிய இடங்களில் 'அடுத்த முதல்வர் டி.கே.சிவகுமார்' என நேற்று பேனர் வைத்தனர். அவரது வீடு மற்றும் காங்கிரஸ் அலுவலகம் முன்பாக குவிந்து, சிவகுமாரை முதல்வராக்க வேண்டும் என கோஷம் எழுப்பினர்.

சித்தராமையாவின் ஆதரவு எம்எல்ஏக்கள் ஜமீர் அகமது, கே.ஜே.ஜார்ஜ் ஆகியோர் தொலைபேசி மூலம் அவருக்கு ஆதர‌வு திரட்டும் முயற்சியில் இறங்கினர்.

இந்நிலையில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ‘‘காங்கிரஸ் சட்டப்பேரவை குழு தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான எம்எல்ஏக்கள் கூட்டம் பெங்களூருவில் 14-ம் தேதி (நேற்று) மாலை நடைபெறும். காங்கிரஸ் சட்டப்பேரவை குழு தலைவரை தேர்ந்தெடுக்க முன்னாள் மகாராஷ்டிர முதல்வர் சுஷில்குமார் ஷிண்டே, காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜிதேந்திரா சிங், மூத்த‌ தலைவர் தீபக் பாபரியா ஆகியோர் காங்கிரஸ் மேலிட பார்வையாளர்களாக நியமிக்கப்படுகின்றனர்'' என அறிவித்தார்.

இதற்கிடையே, நேற்று டி.கே.சிவகுமாரின் பிறந்தநாள் என்பதால் துமகூருவில் உள்ள சித்தகங்கா மடம், காடு சித்தேஸ்வரா கோயில் ஆகியவற்றுக்கு சென்று சிறப்பு பூஜை செய்தார். தனது ஆன்மிக குருவான அஜ்ஜய்யா சுவாமியை சந்தித்து ஆசி பெற்றார். லிங்காயத்து, ஒக்கலிகா சமூக மடாதிபதிகளை தொடர்பு கொண்டு தனக்கு ஆதரவு அளிக்குமாறு அவர் கோரியதாகவும் கூறப்படுகிறது.

சித்தராமையா தனது ஆதரவாளர்கள் மூலம் 70-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்களிடம் பேசி, ஆதரவு கடிதம் பெற்றதாக தகவல் வெளியானது. ஆனால், இதை அவர் மறுத்துள்ளார்.

அதேவேளையில் டி.கே.சிவகுமார், ‘‘எனக்கும் சித்தராமையாவுக்கும் இடையே எந்த பிரச்சினையும் இல்லை. எங்களுக்குள் எந்த போட்டியும் இல்லை. அடுத்த முதல்வர் யார் என்பதில் கட்சி மேலிடம் இறுதி முடிவு எடுக்கும்'' என்றார்.

இந்நிலையில், பெங்களூருவில் உள்ள நட்சத்திர விடுதியில் நேற்று இரவு 8 மணி அளவில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் மாநிலத் தலைவர் டி.கே.சிவகுமார் தலைமையில் கூடியது.

இதில் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா, மேலிடப் பார்வையாளர் சுஷில்குமார் ஷிண்டே, ஜிதேந்திரா சிங், தீபக் பாபரியா மற்றும் புதிய எம்எல்ஏக்கள் பங்கேற்றனர்.

ஆதரவாளர்கள் தர்ணா: அப்போது விடுதிக்கு வெளியே குவிந்த சித்தராமையா மற்றும் டி.கே.சிவகுமாரின் ஆதரவாளர்கள் தங்களின் தலைவருக்கு முதல்வர் பதவி வழங்கக்கோரி கோஷம் எழுப்பினர். சித்தராமையாவின் ஆதரவாளர்கள் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இரு தரப்பு ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் நிலவியதால், போலீஸார் அவர்களை அப்புறப்படுத்தினர்.

ஒரு மணி நேரம் நட‌ந்த கூட்டத்தில் டி.கே.சிவகுமார், ‘‘சோனியா காந்திக்கு அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் கடுமையாக உழைத்து அமோக வெற்றியை பெற்றுத் தந்துள்ளேன். கூட்டு தலைமையால் இந்த வெற்றி கிடைத்தது. அனைவரும் இணைந்து செயல்பட்டு, மக்களுக்கு காங்கிரஸ் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். அடுத்த முதல்வர் யார் என்பதை கட்சி மேலிடம் முடிவெடுக்க வேண்டும்’’ என வலியுறுத்தியதாக தெரிகிறது.

இதைத் தொடர்ந்து பேசிய சித்தராமையா, ‘‘வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள், புதிய முதல்வரை தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த தேர்தல் அனைவரின் முன்னிலையிலும் ஜனநாயக முறைப்படி நடக்க வேண்டும்’’ என்று கோரியதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கார்கேவுக்கு அதிகாரம்: இதைத் தொடர்ந்து கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் புதிய முதல்வரை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதன் நகலை வெளியிட்ட‌ காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா, ‘‘இன்றைய கூட்டத்தில் புதிய முதல்வர் யார் என்பது குறித்து முடிவெடுக்கவில்லை. வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள், தலைவர்கள் இடையே அறிமுக கூட்டம் மட்டுமே நடந்தது. முதல்வரை தேர்வு செய்வதில் எந்த சிக்கலும் ஏற்படவில்லை. தற்போது நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு டி.கே.சிவகுமார், சித்தராமையா உள்ளிட்ட அனைத்து தலைவர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்'' என்றார்.

தலைவர்கள் டெல்லி விரைவு: இதைத் தொடர்ந்து மல்லிகார்ஜுன கார்கே டெல்லி விரைந்துள்ளார். அங்கு மூத்த தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்த இருக்கிறார்.

2024-ம் ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தல், கர்நாடகாவில் நல்லாட்சி ஆகியவற்றை மனதில் வைத்து அடுத்த முதல்வர் பரிசீலனை நடைபெறும். சோனியா, ராகுல் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி புதிய முதல்வரை கார்கே தேர்ந்தெடுப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே டி.கே.சிவகுமார், சித்தராமையா ஆகியோரும் டெல்லி சென்று காங்கிரஸ் மேலிடத் தலைவர்களை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

முதல்வரை கட்சி மேலிடம் தேர்வு செய்து அறிவித்த பிறகு, புதிய அமைச்சரவை வரும் 18-ம் தேதி பதவியேற்கும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த விழாவுக்கு திமுக உள்ளிட்ட தோழமைக் கட்சிகளுக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x