Published : 15 May 2023 05:31 AM
Last Updated : 15 May 2023 05:31 AM
திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ‘தூய்மையான திருமலை - சுந்தர திருமலை’ எனும் புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், திருப்பதி மலையடிவாரத்தில் இருந்து திருமலை முழுவதும் மாதத்தில் ஒருநாள் பிளாஸ்டிக் மற்றும் குப்பைகள் அகற்றப்படுகின்றன.
இந்த ‘மாஸ் க்ளீனிங்’ திட்டத்தில் பங்கேற்க தேவஸ்தான ஊழியர்கள் 700 பேருடன் அலிபிரியிலிருந்து புறப்பட்ட பஸ்களை உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி என்.வி.ரமணா நேற்றுமுன்தினம் காலை 6 மணியளவில் தொடங்கிவைத்தார். இதையடுத்து அலிபிரி, ஸ்ரீவாரி மெட்டு மலைப்பாதைகள் மற்றும் சாலை வழிப்பாதைகள் சுத்தம் செய்யப்பட்டன.
700 தேவஸ்தான ஊழியர்களுடன், திருப்பதி மாவட்ட அரசு ஊழியர்கள், அதிகாரிகள் என200 பேரும், ஸ்ரீவாரி சேவகர்கள், மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் ஆகியோரும் இதில் பங்கேற்றனர். வழியெங்கிலும் பக்தர்கள் வீசிய பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் குப்பைகளை அகற்றினர். சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற இப்பணியில் 1,600 மூட்டை குப்பைகள் சேகரிக்கப்பட்டு, திருப்பதி மாநகராட்சி குப்பை மறுசுழற்சி கிடங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் தலைமை நீதிபதி என்.வி.ரமணா பேசுகையில், "ஏழுமலையான் குடிகொண்டுள்ள திருப்பதி மலை மிகவும் புனிதமானது. இதனை நம் வீட்டு பூஜை அறை போல் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். அது நமது அனைவரின் கடமையாகும்” என்றார்.
தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி பேசுகையில், “இனி ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமை இதேபோன்று ‘மாஸ் கிளீனிங்’ திட்டம் அமல்படுத்தப்படும். தயவுசெய்து பக்தர்கள் யாரும் திருமலைக்கு தண்ணீர் பாட்டில்கள் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வர வேண்டாம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT