Published : 11 Oct 2017 04:42 PM
Last Updated : 11 Oct 2017 04:42 PM
நேரு குடும்பத்தில் இருந்து மூன்று தலைமுறையினர் எம்.பி.யாக இருந்துவரும் அமேதியில் ஏன் வளர்ச்சி இல்லை என்று பாஜக தலைவர் அமித் ஷா கேள்வி எழுப்பியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் அமேதி தொகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அமித் ஷா இவ்வாறு தெரிவித்தார். இதுகுறித்து மேலும் பேசிய அமித் ஷா, ''உங்களின் எம்.பி. ராகுல் காந்தியின் அணுக முடியாத தன்மை மற்றும் புறக்கணிப்புக்கான காரணம் என்ன?
2019 தேர்தலில் பாஜகவுக்கு ஒரு வாய்ப்பளியுங்கள். பாஜக ஆளும் குஜராத்தில் வளர்ச்சி குறித்த விழிப்புணர்வு மக்களிடையே இருக்கிறது. ஆனால் ராகுல் காந்தியால் அதை அமேதியில் மேற்கொள்ள முடியாதது ஏன்? நேரு குடும்பத்தில் இருந்து மூன்று தலைமுறையினர் எம்.பி.யாக இருந்துவரும் அமேதியில் வளர்ச்சி ஏன் இல்லை?
மோடியின் 3 ஆண்டுகால ஆட்சியில் என்ன நடந்தது என்று கேட்கிறீர்களா ராகுல்? அமேதி மக்கள் மூன்று தலைமுறைகளாக நீங்கள் (காங்கிரஸ்) செய்தது என்ன என்று கேட்கிறார்கள்.
மத்தியில் 2014-ல் பாஜக ஆட்சிக்கு வந்தபிறகும் மாநிலத்தில் 2017-ல் ஆட்சியைப் பிடித்த பிறகுமே அமேதி உண்மையான மாற்றத்தையும், வளர்ச்சியையும் நோக்கிச் செல்கிறது.
2019-ல் அமேதியில் மாற்றம் ஏற்படும். நாங்கள் ஓட்டு கேட்க வரும்போது, வாக்குறுதிகளுடன் வரமாட்டோம். ஏற்கெனவே நாங்கள் செய்துவிட்டதை உங்களுக்கு உணர்த்துவோம்'' என்று தெரிவித்தார்.
அமேதியைச் சேர்ந்த மூத்த தலைவர் ஜங் பகதூர் சிங் பாஜகவில் சேர்ந்த அடுத்த நாளில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT