Published : 29 Oct 2017 11:50 AM
Last Updated : 29 Oct 2017 11:50 AM
திருமலையில் உள்ள ஏழுமலையானுக்கு நேற்று 10 டன் மலர்களால் புஷ்ப யாகம் நடைபெற்றது.
ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழாவின்போது அறிந்தும் அறியாமலும் ஏதாவது தவறு நடந்திருந்தால், அதற்கு பரிகாரமாக ஏழுமலையானுக்கு புஷ்ப யாகம் நிகழ்ச்சி நடத்துவது வழக்கம். அந்த வகையில், பிரம்மோற்சவம் முடிந்ததையடுத்து, திருமலையில் உள்ள ஏழுமலையானுக்கு நேற்று புஷ்ப யாக நிகழ்ச்சிகள் வெகு விமரிசையாக நடைபெற்றன.
முன்னதாக திருமலை ஏழுமலையான் கோயிலில் உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி சமேதமாய் மலையப்ப சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சன சேவை நடைபெற்றது. பின்னர் 12 ரக வண்ண மலர்களாலும், தவனம், துளசி ஆகியவற்றாலும் சுவாமிக்கு புஷ்ப யாகம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த மலர்களை 20 முறை சுவாமிக்கு அர்ச்சனை செய்தனர்.
மேலும் திருமலையில் உள்ள கல்யாண மண்டபத்தில் இருந்து கோயில் வரை சுவாமி ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. இதில் தேவஸ்தான இணை நிர்வாக அதிகாரி ஸ்ரீநிவாச ராஜு, கோயில் உதவி நிர்வாக அதிகாரி கோதண்ட ராமா ராவ் மற்றும் 500 ஊழியர்கள், 500 ஸ்ரீவாரி சேவகர்கள் பங்கேற்றனர். பின்னர் பூக்களை கோயில் அருகே தேவஸ்தான உயர் நிர்வாக அதிகாரி அனில் குமார் சிங்காலிடம் ஒப்படைத்தனர்.
புஷ்ப யாகத்துக்காக தமிழகத்தைச் சேர்ந்த குணசேகர் என்ற பக்தர் 4 டன் மலர்களை காணிக்கையாக வழங்கினார்.
மேலும், கர்நாடக மாநிலத்தில் இருந்து 3 டன், ஆந்திர மாநிலத்தில் இருந்து 1 டன், தெலங்கானாவிலிருந்து 1 டன் மற்றும் திருமலையில் உள்ள பூந்தோட்டத்திலிருந்து 1 டன் என மொத்தம் 10 டன் பூக்கள் யாகத்துக்கு பயன்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT