Last Updated : 13 May, 2023 08:19 PM

23  

Published : 13 May 2023 08:19 PM
Last Updated : 13 May 2023 08:19 PM

கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றிக்குப் பின்னால் ‘தமிழர்’... யார் இந்த சசிகாந்த் செந்தில் ஐஏஎஸ்?

சசிகாந்த் செந்தில்

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. இந்த தேர்தல் வெற்றிக்குப் பின்னால் நிச்சயமாக பல்வேறு அரசியல் வியூகங்கள் இருக்கும். ஆனால், இந்த பிரம்மாண்ட வெற்றிக்குப் பின்னால் ஓர் ஓய்வு பெற்ற அதிகாரியின் மூளையும் இருக்கிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஊடகங்களில் காங்கிரஸ் வெற்றியோடு சேர்த்து ஓர் அடைமொழி போல் கூறப்படுகிறது சசிகாந்த் செந்தில் என்ற ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியின் பெயர்.

யார் இந்த சசிகாந்த் ஐஏஎஸ்?

சசிகாந்த் செந்தில் கர்நாடக கேடர் ஐஏஎஸ் அதிகாரி. தன் பணிக்காலத்தில் அவர் கர்நாடக மாநிலத்தில் சித்ரதுர்கா, ராய்ச்சூர் மாவட்டங்களில் ஆட்சியராகப் பணியாற்றியுள்ளார். பல்வேறு துறைகளிலும் பணியாற்றியுள்ளார். அதனால் அவருக்கு கர்நாடக மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள், தேவைகள் என்னவென்பது குறித்த ஆழமான, தெளிவான புரிதல் இருந்துள்ளது.

சசிகாந்த் செந்தில், 2019 செப்டம்பரில் தனது பணியை ராஜினாமா செய்தார். ‘தேசத்தை கட்டமைக்கும் அடிப்படை அமைப்புகள் சிதைக்கப்படுகின்றன. அவற்றை காப்பாற்ற வேண்டும்’ என்று கூறியே அவர் தனது பணியை ராஜினாமா செய்தார். (ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் ராஜினாமா)

அதன் பின்னர் தமிழக காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சமூகவலைதளப் பிரிவு ஒருங்கிணைப்பாளராகவும் இருந்தார். கர்நாடகத் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும் தமிழக பாஜக தலைவரும் அண்ணாமலை பாஜக சார்பில் தேர்தல் பணிக்காக அனுப்பப்பட்ட அதே வேளையில், காங்கிரஸ் சார்பில் களமிறக்கப்பட்டது சசிகாந்த் செந்திலே. கட்சியின் கட்டளையை ஏற்று கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் வெற்றிக்கான பணியை கையில் எடுத்தார். அதை இப்போது திறம்பட முடித்துள்ளார்.

சமூக வலைதளம் எனும் ஆயுதம்: அதுமட்டுமல்ல பல்வேறு தருணங்களிலும் கர்நாடக மாநிலத்தில் பாஜகவின் நடவடிக்கைகளைக் கடுமையாக விமர்சித்துள்ளார். ஹிஜாப் தடை விவகாரம், ஊழல் விவகாரம், முஸ்லிம்களுக்கான 4 சதவீத உள் ஒதுக்கீடு ரத்து விவகாரம் என பல்வேறு முக்கியப் பிரச்சினைகள் குறித்தும் தனது சமூக வலைதள பக்கத்தில் விரிவாக விமர்சித்து வந்துள்ளார். அவை அனைத்துமே அதிக கவனம் பெற்றவையாக உள்ளன. கீழே உள்ள ட்வீட் அதற்கு ஓர் சான்று.

அதேபோல் மே 3 ஆம் தேதி சசிகாந்த் செந்தில் பதிவு செய்த ட்வீட் ஒன்று கவனம் பெற்றது. "6 மாத கால கடின உழைப்பிற்கு மே 10ஆம் பலன் கிடைக்கப்போகிறது. ‘Connect centre’ கனெக்ட் சென்டர் என்றழைக்கப்பட்ட காங்கிரஸ் வார் ரூம் கட்சியில் கூர்மையான தேர்தல் நிர்வாகத்தில் சிறந்த பங்களிப்பைக் கொடுத்தது" என்று பதிவிட்டிருந்தார்.

5 தேர்தல் வாக்குறுதிகளின் மூளை: காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் வாக்குறுதியை வெளியிட்டபோது அதில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.2000 தொகை, பெண்களுக்கு இலவசப் பேருந்து உள்ளிட்ட 5 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டது. இவற்றின் மூளையாக செயல்பட்டவர் சசிகாந்த் செந்தில் என்று கூறப்படுகிறது.

தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் வெளியிடுவதற்கு முன்னர் செந்தில் கள ஆய்வு மேற்கொண்டுள்ளார். ஒரு பெரிய குழுவுடன் இதற்காக ஒரு வார் ரூமே அவர் அமைத்துள்ளார். துடிப்பான இளைஞர்கள் நிரம்பிய அந்த வார் ரூம் மூலம் அவர் தீவிர கள ஆய்வு மேற்கொண்டு தேர்தல் அறிக்கையில் எந்த மாதிரியான அறிவிப்புகளை வெளியிட்டால் அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை தரும் என்பது குறித்து கட்சி மேலிடத்திற்கு ஓரு அறிக்கையை சமர்ப்பித்துள்ளார். அதனை கவனமாக பரிசீலித்த காங்கிரஸ் மூத்த முக்கியத் தலைவர்கள் தேர்தல் அறிக்கையை இறுதி செய்து வெளியிட்டுள்ளனர்.

1. க்ருஹ லக்‌ஷ்மி திட்டத்தின் கீழ் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2000 வழங்கப்படும்.
2. உச்சித பிரயணா திட்டத்தின் கீழ் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம்.
3.யுவா நிதி திட்டத்தின் கீழ் வேலையில்லா பட்டதாரிகளுக்கு குறைந்தது இரண்டாண்டுகள் வரை மாதம் ரூ.3,000 வழங்கப்படும். வேலையில்லா டிப்ளமோ பயின்றவர்களுக்கு ரூ.1,500 வழங்கப்படும்.
4. க்ருஹ ஜோதி திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வீட்டுக்கும் 200 யூனிட்டுகள் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும்.
5. அன்ன பாக்யா திட்டத்தின் கீழ் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மாதம் 10 கிலோ அரிசி அல்லது சிறுதானியம் வழங்குதல். இந்த 5 திட்டங்களும் சசிகாந்த் செந்திலின் பரிந்துரைகளை ஏற்று வகுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவை மட்டுமல்லாமல் பஜ்ரங் தள அமைப்பை தடை செய்யலாம் என்ற யோசனையையும் இவரே கூறியிருப்பதாக தெரிகிறது.

எப்படிப்பட்ட வார் ரூம்?: சசிகாந்த் செந்தில் அமைத்திருந்த வார் ரூம் பற்றி மகாராஷ்டிராவை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் நிகில் காம்ப்ளே கூறுகையில், ”வார் ரூமின் திட்டம் தெள்ளத் தெளிவாக இருந்தது. அவர்கள் அனைவரும் கர்நாடக மக்களின் பிரச்சினைகள் என்னவென்பதை அறிய பணிக்கப்பட்டனர். கூடவே அதற்கான தீர்வாக என்னவெல்லாம் என்பதை வகுப்பதாகவும் இருந்தது. மக்களிடமே பிரச்சினைகளைக் கேட்டறிந்தனர். மக்களிடம் என்ன தீர்வு எதிர்பார்க்கிறார்கள் என்றும் கேட்டறிந்தனர். இதன் அடிப்படையிலேயே மிகக் கவனமாக தேர்தல் உத்தியும், தேர்தல் அறிக்கையும் வகுக்கப்பட்டது” என்றார்.

இவ்வாறாக கட்சியினர் கொண்டாடும் ஓர் ஓய்வு பெற்ற அதிகாரி இப்போது நெட்டிசன்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x