Published : 13 May 2023 10:57 AM
Last Updated : 13 May 2023 10:57 AM
பெங்களூரு: கர்நாடகாவின் அடுத்த முதல்வராக தனது தந்தை தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று சித்தராமையாவின் மகன் யதீந்திர சித்தராமையா தெரிவித்துள்ளார்.
கர்நாடக சட்டப்பேரவையின் மொத்தமுள்ள 224 தொகுதிகளுக்கு நடைபெற்ற பொதுத் தேர்தலில் பதிவான வாக்குகள் மாநிலம் முழுவதும் உள்ள 36 மையங்களில் எண்ணப்பட்டு வருகிறது. காலை 10.40 மணி நிலவரப்படி, காங்கிரஸ் கட்சி - 114, பாஜக - 76, மஜத - 30 இடங்களில் முன்னணியில் இருந்து வருகின்றன. தேர்தலுக்குப் பிந்தைய பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் கூறியபடியே, காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வருவதை அடுத்து கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியினர் நடனமாடி தங்கள் மகிழ்ச்சி வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், கர்நாடக காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் மகனுமான யதீந்திர சித்தராமையா, கர்நாடகாவின் அடுத்த முதல்வராக தனது தந்தை தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: "கர்நாடக மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வராமல் இருக்க நாங்கள் எதையும் செய்வோம். கர்நாடகாவின் நலன் கருதி எனது தந்தை முதல்வராக வேண்டும். வருணா தொகுதியில் என் தந்தை சித்தராமையா பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். கண்டிப்பாக அவர் முதல்வராக வேண்டும் என்று நான் விரும்புகிறேன். கடந்த முறை அவர் சிறப்பாக ஆட்சி செய்திருந்தார். இந்த முறை மீண்டும் அவர் முதல்வரானால் பாஜக ஆட்சியில் விளைந்த ஊழலும் துஷ்பிரயோகங்களும் சரி செய்யப்படும். மாநிலத்தின் நலனுக்காக அவர் முதல்வராக வேண்டும்." இவ்வாறு யதீந்திர சித்தராமையா தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளராக தேர்தலுக்கு முன்பு யாருடைய பெயரும் அறிவிக்கப்படவில்லை. இதனால், கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார் என்பதில் முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கும், கர்நாடக காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி.கே.சிவகுமாருக்கும் இடையே போட்டி நிலவி வருகிறது. வருணா தொகுதியில் கடந்த 2008 முதல் வெற்றி பெற்று வரும் சித்தராமையா இந்த முறை 2700 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார். இன்னொரு புறம் 1989 முதல் கனகபுரா தொகுதியில் எம்எல்ஏவாக இருந்து வரும் டி.கே.சிவகுமார் 12,542 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார். இருவரில் யார் கர்நாடக முதல்வர் என்பதை கட்சித் தலைமையே முடிவு செய்யும் என்று கர்நாடக காங்கிரஸார் கூறி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT