Published : 13 May 2023 04:31 AM
Last Updated : 13 May 2023 04:31 AM
பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்படுகின்றன. காலை 10 மணி முதல் முன்னிலை விவரம் வெளியாகி 12 மணிக்குள் பெரும்பாலான முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 10-ம் தேதி ஒரே கட்டமாக நடந்தது. மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்ட 58,545 வாக்குப்பதிவு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்தது.
73.19 சதவீத வாக்குப்பதிவு: இதில் 73.19 சதவீத வாக்குகள் பதிவாகின. அதிகபட்சமாக மேல்கோட்டையில் 91 சதவீதமும், குறைந்தபட்சமாக பெங்களூருவில் உள்ள பொம்மனஹள்ளியில் 47.36 சதவீத வாக்குகளும் பதிவாகின.
இத்தேர்தலில் ஆளும் பாஜக 224, எதிர்க்கட்சியான காங்கிரஸ் 223 (ஒரு தொகுதி விவசாய சங்கம்), மதச்சார்பற்ற ஜனதா தளம் 207, ஆம் ஆத்மி 217, பகுஜன் சமாஜ் 133 தொகுதிகளில் போட்டியிட்டன. 918 சுயேச்சைகள் உட்பட மொத்தம் 2,613 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர்.
முதல்வர் பசவராஜ் பொம்மை - ஷிகோன், முன்னாள் முதல்வர் சித்தராமையா - வருணா, மஜத தலைவர் குமாரசாமி - சென்னபட்ணா, காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் - கனகபுரா தொகுதியில் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் காங்கிரஸ், பாஜக, மஜத இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. 2024 மக்களவை தேர்தலுக்கான முன்னோட்டமாக கருதப்படுவதால், இந்த தேர்தல் முடிவுகள் தேசிய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
வாக்குகள் பதிவான 75,603 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், 34 மண்டல மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, 3 அடுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பெட்டிகள் திறக்கப்பட்டு, வாக்கு எண்ணிக்கை தொடங்கும். காலை 10 மணி முதல் முன்னிலை விவரம் வெளியாகி, 12 மணிக்குள் பெரும்பாலான முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பெரும்பான்மைக்கு தேவை ‘113’: 224 தொகுதிகள் கொண்ட கர்நாடகாவில் 113 தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியும்.
இந்த சூழலில், தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலானவை காங்கிரஸுக்கு சாதகமாக உள்ளன.
முதல்வர் பதவிக்கு போட்டி: காங்கிரஸ் வெற்றி பெற்றால் யார் முதல்வர் என்பதில் முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கும், மாநிலத் தலைவர் டி.கே.சிவகுமாருக்கும் போட்டி ஆரம்பமாகியுள்ளது. இதனால் இருவரும் தங்களது ஆதரவு வேட்பாளர்களுடன் ரகசிய ஆலோசனை தொடங்கியுள்ளனர்.
சிவகுமார் தான் சார்ந்த 43 ஒக்கலிகா வேட்பாளர்களையும் தொடர்புகொண்டு தனக்கு ஆதரவாக செயல்படுமாறு கேட்டுக்கொண்டதாக தெரிகிறது. அவர் நேற்று காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்து சுமார் 1 மணி நேரம் ஆலோசனை நடத்தினார். அதேபோல, முன்னாள் துணை முதல்வர் பரமேஷ்வரும் கார்கேவை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.
பாஜகவில் முதல்வர் பதவியை கைப்பற்ற பசவராஜ் பொம்மை, அமைச்சர் அசோகா, முன்னாள் அமைச்சர் சி.டி.ரவி, மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி இடையே போட்டி ஏற்பட்டுள்ளது.
கடந்த 2018 தேர்தலில் பாஜக 104, காங்கிரஸ் 80, மஜத 37 தொகுதிகளை கைப்பற்றின. எந்த கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காததால் காங்கிரஸ் - மஜத இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தன. ஓராண்டுக்கு பிறகு, 17 எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு தாவியதால் அந்த ஆட்சி கவிழ்ந்தது.
‘ஆபரேஷன் தாமரை’யால் அச்சம்: ஒருவேளை, தற்போது தொங்கு சட்டப்பேரவை அமைந்து, பாஜக கணிசமான இடங்களில் வெற்றி பெற்றால், மஜதவுடன் கூட்டணி அமைக்கும். அல்லது, ‘ஆபரேஷன் தாமரை’ மூலம் காங்கிரஸ் எம்எல்ஏக்களை இழுக்கும் முயற்சியில் ஈடுபடும் என காங்கிரஸ் கருதுகிறது. இதனால், தங்கள் ஆதரவு வேட்பாளர்களை பாதுகாக்கும் முயற்சியில் காங்கிரஸ் கோஷ்டி தலைவர்கள் அனைவரும் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
மஜதவுடன் கூட்டணி அமைக்க கட்சிகள் பேரம்: எந்த கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காது என்றும் கணிசமான கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன. அவ்வாறு, தொங்கு சட்டப்பேரவை அமைந்தால் மஜதவுடன் கூட்டணி வைப்பது தொடர்பாக காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆலோசனை நடத்தியுள்ளார். இதுபற்றி மஜத தேசியத் தலைவர் தேவகவுடாவுடன் அவர் தொலைபேசியில் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. சிங்கப்பூர் சென்றுள்ள முன்னாள் முதல்வர் குமாரசாமியுடன் காங்கிரஸ் மாநிலத் தலைவர் டி.கே.சிவகுமார் தொலைபேசியில் பேசியுள்ளார். கடந்த முறை குமாரசாமி ஆட்சியை காப்பாற்ற சிவகுமார் கடுமையாக பணியாற்றியதால், அவரிடம் குமாரசாமி இணக்கம் காட்டுவதாகவும் கூறப்படுகிறது.
பாஜக தலைவர்கள் அசோகா, சி.டி.ரவி ஆகியோர் ஒக்கலிகா வகுப்பை சேர்ந்தவர்கள் என்பதால், மஜதவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளனர். அவர்கள் குமாரசாமியை தொடர்புகொண்டு, தேர்தலுக்கு பின்னர் கூட்டணி ஆட்சி அமைப்பது தொடர்பாக ஆதரவு கேட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT