Last Updated : 11 May, 2023 04:42 PM

2  

Published : 11 May 2023 04:42 PM
Last Updated : 11 May 2023 04:42 PM

வாக்களிப்பதை ஊக்குவிப்பதற்காக பெங்களூரு உணவகம் அதிரடி: மை இட்ட விரலை காட்டினால் தோசை, மைசூர் பாக், பழச்சாறு இலவசம்

கிருஷ்ண ராஜ், நிசர்கா உணவகம்

பெங்களூரு: பெங்களூருவில் வாக்களிப்பதை ஊக்குவிக்கும் வகையில் அங்குள்ள உணவகம் வாக்கை செலுத்தியவர்களுக்கு தோசை, மைசூர் பாக், பழச்சாறு இலவசமாக வழங்கியுள்ளது.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை விறுவிறுப்பாக நடைபெற்றது. கடந்த தேர்தல்களில் ஒட்டுமொத்த கர்நாடகத்தோடு ஒப்பிடுகையில், பெங்களூருவில் குறைந்த அளவே வாக்குப்பதிவு சதவீதம் பதிவானது. இந்நிலையில் பெங்களூரு வாக்காளர்களை ஊக்குவிக்கும் வகையில் அங்குள்ள உணவகங்கள் சலுகைகளை அறிவித்துள்ளன.

இந்நிலையில் பெங்களூரு ஹட்சன் சதுக்கத்தில் உள்ள நிச‌ர்கா உணவகம் வாக்களித்தவர்களுக்கு நேற்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை இலவசமாக தோசை, மைசூர் பாக், தர்பூசணி பழச்சாறு ஆகியவற்றை வழங்கியது. இதனால் வாக்காளர்கள் அங்கு சென்று வாக்களித்ததற்கு ஆதராமாக தங்களின் மை இட்ட விரலை காட்டி உணவை வாங்கி சுவைத்தனர். இதே போல முதலில் வந்த 100 வாக்காளர்களுக்கு இலவச சினிமா டிக்கெட்டையும் அந்த உணவகம் சார்பில் வழங்கப்பட்ட‌து.

ஜனநாயகத்தை காக்க.. இதுகுறித்து நிசர்கா உணவகத்தின் உரிமையாளர் கிருஷ்ணராஜ் கூறுகையில்,''கடந்த 2018ம் ஆண்டு தேர்தலின்போது 3 ஆயிரத்து 900 பேருக்கு தோசை வழங்கினோம். 2019 மக்களவைத் தேர்தலில் இந்த எண்ணிக்கை 5 ஆயிரத்து 100 ஆக அதிகரித்தது. இந்நிலையில் இந்த ஆண்டு தேர்தல் ஆணையம் இலவசமாக உணவு வழங்க தடை விதித்தது.

இதை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் முறையிட்டு, அனுமதி பெற்றோம். இந்த முறை காலை 7 மணி முதலே வாடிக்கையாளர்கள் எங்களது உணவகத்தை தேடி வந்தனர். 8 ஆயிரம் பேருக்கு உணவைப் பரிமாற தயாராக இருந்தேன். மாலை 6 மணி வரை 5 ஆயிரத்து 300 பேர் வந்து தோசை, மைசூர் பாக், தர்பூசணி பழச்சாறு ஆகியவற்றை சுவைத்துள்ளனர். இதன் மூலம் பெங்களூருவில் வாக்குப்பதிவு அதிகரித்து, நல்ல ஆட்சியாளர்களை தேர்வு செய்ய வேண்டும். நம்முடைய ஜனநாயகத்தை காப்பதற்காகவே இந்த சிறப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறேன்''என்றார்.

அதேபோல், வாக்கு செலுத்திய‌வர்களுக்கு பெங்களூரு ஒன்டர் லா கேளிக்கை மைய கட்டண‌த்தில் 15 சதவீத கழிவு வழங்கப்பட்டுள்ளது. இந்த சலுகை மே 12ம் தேதி வரை மட்டுமே கட்டண‌வில் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல சாலுக்யா கபே உணவகத்தில் நேற்று காலை 7 மணி முதல் 11.30 மணிவரை காலை சிற்றுண்டி இலவசமாக வழங்கப்பட்டது. 800 பேர் இலவசமாக சிற்றுண்டி சாப்பிட்டதாக அந்த உணவகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x