Published : 11 May 2023 01:46 PM
Last Updated : 11 May 2023 01:46 PM
புதுடெல்லி: டெல்லி யூனியன் பிரதேசத்தின் நிர்வாக சேவைகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கே அதிகாரம் உண்டு என்றும், அதன் முடிவுக்கு மாநில ஆளுநர் கட்டுப்பட வேண்டும் என்றும் அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டுள்ளது.
நாட்டின் தலைநகராகவும் யூனியன் பிரதேசமாகவும் இருக்கும் டெல்லியில், காவல்துறை மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. டெல்லியின் பாதுகாப்பு, அங்கு பொது நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிப்பது உள்ளிட்ட அனைத்து அதிகாரங்களும் மத்திய அரசு வசம் உள்ளது. இந்நிலையில், டெல்லி யூனியன் பிரதேசத்தின் அதிகாரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கே உண்டு என்றும், இதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கோரி டெல்லி மாநில உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. ஆளும் ஆம் ஆத்மி அரசு தொடர்ந்த இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், வழக்கை 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி கடந்த ஆண்டு மே மாதம் 6-ம் தேதி உத்தரவிட்டது. அதிகாரத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது யார் என்ற விவாதம் எழுந்துள்ளதால் இந்த விவகாரத்தை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வின் அதிகாரப்பூர்வமான தீர்ப்புக்காக பரிந்துரைப்பதே பொருத்தமானதாக இருக்கும் என்று அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வு தெரிவித்திருந்தது.
இந்தநிலையில், இந்த வழக்கில் 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு, நிர்வாக சேவைகளில் டெல்லி அரசிடமே அதிகாரம் இருக்க வேண்டும் என்றும், மாநில ஆளுநர் அதற்கு கட்டுப்பட வேண்டும் என்றும் அரசியல் சாசன அமர்வு ஒருமனதாக இன்று (மே 11) தீர்ப்பளித்துள்ளது. அதன் விபரம்: "டெல்லியின் நிர்வாக சேவைகள் உள்ளிட்டவற்றில் மாநில அரசு மற்றும் ஆளுநரில் யாருக்கு அதிகாரம் இருக்கிறது என்ற வழக்கில் நீதிபதி அசோக் பூஷன் 2019ம் ஆண்டு வழங்கிய தீர்ப்பில் இந்த அமர்வு உடன்படவில்லை. மக்கள் விருப்பத்தை பிரதிநிதித்துவப்படுத்த சட்டமியற்றும் அதிகாரம் டெல்லி சட்டபேரவைக்கு வழங்கப்பட்டுள்ளது. ஜனநாயகம் மற்றும் கூட்டாட்சி என்பது அடிப்படைக் கட்டமைப்பின் ஒரு பகுதியாகும். கூட்டாட்சி என்பது உயிர்வாழ்வதற்கான பல்வேறு நலன்களை உறுதி செய்கிறது மற்றும் தேவைகளுக்கு இடமளிக்கிறது.
ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதன் அதிகாரிகளைக் கட்டுப்படுத்தும், கேள்வி கேட்கும் அதிகாரம் இல்லை என்றால் அந்த அரசுக்கு சட்டமன்றம் மற்றும் பொதுமக்கள் மீதான பொறுப்பு நீர்த்துப்போகும். எந்த ஒரு அதிகாரியும் அரசாங்கத்திற்கு கட்டுப்பட வேண்டிய தேவை இல்லையென்றால் கூட்டுப்பொறுப்பு என்பது இல்லாமல் போய்விடும். எந்த ஒரு அதிகாரியும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசால் தான் அவமானப்படுத்தப்பட்டதாக உணரும்போது அவர்கள் அரசுக்கு கட்டுப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கலாம். அதிகாரிகள் அமைச்சர்களுக்கு பதில் அளிக்க வேண்டிய தேவையில்லை என்று நினைத்தால், அவர்களின் வழிகாட்டுதல்களை ஏற்க மறுத்தால் கூட்டுப்பொறுப்பின் கொள்கைகள் பாதிக்கப்படும்.
மத்திய அரசை பிரதிநிதித்துவப்படுத்தும் துணை நிலை ஆளுநர், சேவைகள் குறித்து தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முடிவுகள் மற்றும் அதன் அமைச்சரவை குழுவின் ஆலோசனைகளுக்கு கட்டுபட்டவர். குடியரசுத் தலைவரால் வழங்கப்பட்டுள்ள நிர்வாக அதிகாரங்கள் துணைநிலை ஆளுநருக்கு உண்டு என்றாலும் அது ஒட்டுமொத்த டெல்லி அரசின் நிர்வாகத்தினை கட்டுப்படுத்தாது. அப்படி இல்லையென்றால் டெல்லியை ஆளுவதற்கு தனியாக ஒரு நிர்வாக அமைப்பினைத் தேர்ந்தெடுத்ததற்கான அர்த்தம் இல்லாமல் போய்விடும்" இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு ஆம் ஆத்மி அரசுக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT