Published : 11 May 2023 08:03 AM
Last Updated : 11 May 2023 08:03 AM
பரேலி: ஒன்பது வயது மகள் அளித்த சாட்சியத்தின் அடிப்படையில் தாயை கொலை செய்த தந்தைக்கு உத்தர பிரதேசத்தின் பரேலி நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது.
உத்தர பிரதேசம் பரேலி பகுதியைச் சேர்ந்த டாக்டர் இக்பால் அகமது நிஷோ தேவியை காதலித்துள்ளார். அப்போது தனது பெயரை டாக்டர் ராஜூ சர்மா என கூறியுள்ளார். இவர்களுக்கு சஹாரன்பூரில் இந்து முறைப்படி கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
கணவரின் சொந்த ஊரான பரேலியின் மீராகன்ஜ் பகுதிக்கு சென்றபோதுதான் தனது கணவர் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர் என்றும், அவர் ஏற்கெனவே திருமணம் ஆனவர் என்பதும் தெரியவந்தது. மேலும் நிஷாவை முஸ்லிம் மதத்துக்கு மாறும்படி இக்பால் வற்புறுத்தியுள்ளார். இதற்கு நிஷா மறுப்பு தெரிவித்ததால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு அதிகரித்துள்ளது.
தலைமறைவு
இந்நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் 28-ம் தேதி நிஷா தனது வீட்டில் இறந்து கிடந்தார். அவர்களது 9 வயது மகள், இதுகுறித்து தனது பாட்டியிடம் (நிஷாவின் தாய்) தகவல் தெரிவித்தார். இதனிடையே இக்பால் தலைமறைவானார்.
நிஷா தேவியின் தாய் அளித்த புகாரின் பேரில் போலீஸார் கொலை வழக்கு பதிவு செய்து இக்பாலை தேடிவந்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் நிஷா தேவி கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்து தெரியவந்தது. இதையடுத்து 3 மாதத்துக்குப்பின் இக்பால் கைது செய்யப்பட்டார்.
பரேலி நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கு விசாரணையின் போது நிஷாவின் 9 வயது மகள்,‘‘எனது தாய் வீட்டில் டி.வி பார்த்துக் கொண்டிருந்தபோது, தந்தை இக்பால் மேலும் இருவருடன் சேர்ந்து கழுத்தை நெரித்து கொலை செய்தார்’’ என சாட்சியம் அளித்தார்.
மகள் அளித்த சாட்சியத்தின் அடிப்படையில் டாக்டர் இக்பாலுக்கு ஆயுள் தண்டனை விதித்து பரேலி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT