Published : 31 Oct 2017 01:28 PM
Last Updated : 31 Oct 2017 01:28 PM
குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் ஹர்திக் படேல் தலைமையிலான படேல் இடஒதுக்கீடு போராட்டக்குழுவினர் காங்கிரஸ் கூட்டணியில் இணையத் தயாராகி வருகின்றனர்.
குஜராத்தில் ஹர்திக் படேல் தலைமையில், படேல் சமூகத்தினர் இட ஒதுக்கீடு கோரி இரண்டு ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அங்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த விவகாரம் முக்கிய தேர்தல் பிரச்னையாக எதிரொலிக்கிறது. இதனால் ஆளும் பாஜகவிற்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை பயன்படுத்திக் கொள்ள எதிர்கட்சியான காங்கிரஸ் முயன்று வருகிறது.
படேல் சமூகத்திற்கு கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு, போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெறுவது உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை ஹர்திக் படேல் முன் வைத்துள்ளார். இதுதொடர்பாக படேல் இடஒதுக்கீடு போராட்டக்குழுவான பட்டிதார் அனாமத் அந்தோலன் சமிதி நிர்வாகிகளுடன், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
அதேசமயம் படேல் போராட்டக் குழுவில் பிளவை ஏற்படுத்தி அதன் நிர்வாகிகளான வருண் படேல் உள்ளிட்டோரை பாஜக தங்கள் பக்கம் இழுத்துள்ளது.
இந்நிலையில் படேல் போராட்டக்குழுவினருடன் காங்கிரஸ் நிர்வாகிகள் நேற்று பேச்சு நடத்தினர். இதில் ஹர்திக் படேல் கலந்து கொள்ளவில்லை. பின்னர் இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசினார். அப்போது ''காங்கிரஸ் நிர்வாகிகளுடன் நடந்த பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்துள்ளது. காங்கிரஸ் அரசு அமைந்தால் படேல் போராட்டக்குழுவினர் மீது 2015ம் ஆண்டில் பாஜக அரசு தொடுத்த வழக்குகள் அனைத்தையும் திரும்ப பெறத் தயார் என அறிவித்துள்ளது. உயர் ஜாதியினரின் வளர்ச்சிக்காக ரூ.2000 கோடி நிதியில் சிறப்பு திட்டத்தை செயல்படுத்தவும் காங்கிரஸ் முன் வந்துள்ளது.
படேல் சமூக போராட்டத்தின் போது உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 35 லட்சம் ரூபாய் இழப்பீடு தருவதாகவும் அறிவித்துள்ளது'' எனக் கூறினார்.
இதன் மூலம் ஹர்திக் படேல் தலைமையிலான இடஒதுக்கீடு போராட்டக்குழு காங்கிரஸுடன் கூட்டாக சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்கும் என தெரிகிறது. அதேசமயம் நாளை முதல் மூன்று நாள் குஜராத்தில் ராகுல் காந்தி தீவிர சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அவருடன் இணைந்து பிரச்சாரம் செய்வது தொடர்பாக ஹர்திக் படேல் இதுவரை அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT