Published : 10 May 2023 04:42 PM
Last Updated : 10 May 2023 04:42 PM
திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் இளம் பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அழைத்துவரப்பட்ட கைதியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொல்லம் மாவட்டம் கொட்டாரக்கரா தாலுகா மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக வேலை பார்த்தவர் வந்தனா தாஸ் (23). இன்று (புதன்கிழமை) அதிகாலையில் இந்த மருத்துவமனைக்கு போலீஸாரால் மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்துவரப்பட்ட சந்தீப் என்ற கைதி கத்திரிக்கோலால் வந்தனா தாஸை தாக்கியுள்ளார். எதிர்பாராத இந்தத் தாக்குதலில் இருந்து தப்பிக்க வழிதெரியாத பயிற்சி மருத்துவர் தாக்குதலில் படுகாயமடைந்தார் அதனைத் தொடர்ந்து அவர் திருவனந்தபுரத்தில் உள்ள கிம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கழுத்தில் ஏற்பட்டிருந்த ஆழமான காயம் அவரது உயிரிழப்புக்கு காரணமானதாக அறிக்கைகள் கூறுகின்றன.
இந்தச் சம்பவம் புதன்கிழமை அதிகாலை 5 மணியளவில் நடந்துள்ளது. இதுகுறித்து வெளியான தகவலின்படி, பரிசோதனைக்கு அழைத்துவரப்பட்ட சந்தீப் முதலில் தனது உறவினரைத் தாக்கியுள்ளார். அதனைத் தொடர்ந்து அருகில் இருந்தவர்களையும் தாக்கியுள்ளார். அப்போது பயிற்சி மருத்துவரை கழுத்து மார்பு என கடுமையாக குத்தி காயப்படுத்தியுள்ளார். இந்த தாக்குதலில் சந்தீப் உறவினர், போலீஸார் உட்பட நான்குபேர் காயமடைந்தனர் என்று கூறப்படுகிறது.
பயிற்சி மருத்துவரைத் தாக்கிய சந்தீப் ஒரு ஆசிரியர். குடிக்கு அடிமையான அவர் தற்போது பணியிடை நீக்கத்தில் உள்ளார். அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுடன் அடிக்கடி சண்டையில் ஈடுபடும் சந்தீப் சம்பவத்தன்று உறவினர் ஒருவருடன் தகராறில் ஈடுபட்டு போலீஸாரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
இதனைத்தொடர்ந்து கிம்ஸ் மருத்துவமனையில் இருந்த பயிற்சி மருத்துவரின் உடலை மாநில ஆளுநர் ஆரிஃப் முகம்மது கான் மற்றும் முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் சென்று பார்த்தனர்.
இந்தநிலையில், இச்சம்பவம் குறித்து கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கத்திக்குத்தால் பெண் மருத்துவர் உயிரிழந்ததற்கு இரங்கல் தெரிவித்துள்ள அமைச்சர், மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்துவரப்பட்ட குற்றம்சட்டப்பட்ட ஒருவரால் பெண் மருத்துவர் உயிரிழந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. அந்த மருத்துவமனையில் ஒரு போலீஸ் சோதனைச் சாவடி உள்ளது. சம்பவத்தின் போது மருத்துவமனையில் பல சுகாதார அதிகாரிகளும், தலைமை மருத்துவ அதிகாரியும் இருந்துள்ளனர். அனுபவமற்ற அந்த இளம் மருத்துவர் குற்றம்சாட்டப்பட்டவரைப் பார்த்து பீதியடைந்துள்ளாதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து அவர் தாக்கப்பட்டிருக்கிறார்" என்று கூறியுள்ளார்.
அமைச்சரின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சரின் கருத்துக்கு பதில் அளித்துள்ள எம்எல்ஏ கணேஷ் குமார்,"குடிக்கு அடிமையான ஒருவரின் தாக்குதலில் இருந்து எவ்வாறு தற்காத்துக்கொள்ள வேண்டும். கத்தியால் குத்தியவர் மருத்துவரைக் கொடூரமாக தாக்கியுள்ளார்" என்று கூறியுள்ளார்.
கோட்டயம் மாவட்டத்தைச் சேர்ந்த வந்தனா தாஸ், அஜீசியா மருத்துவக்கல்லூரியில் மருவத்துவம் பயின்றிருக்கிறார். வந்தனா தாஸ் ஒரு மாதம் கொட்டாக்கரா தாலுகா மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியமர்த்தப்பட்டுள்ளார். நேற்று இரவுப் பணியில் இருந்த நிலையில் இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்தக் கொலை சம்பவத்தைக் கண்டித்து மாநிலம் முழுவதும் பயிற்சி மருத்துவர்களும், சுகாதார அதிகாரிகளும் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT